நொற்றிங்ஹம் சினிவேர்ல்ட் திரையரங்கில் கத்திக்குத்து : இருவர் கைது
நொற்றிங்ஹம் நகர மையத்தில் உள்ள திரையரங்கில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 க்கு சினிவேர்ல்ட் திரையரங்கில் நடந்த சண்டையில் 20 வயது இளைஞன் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இளைஞனது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும் சிகிச்சையின் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் தொடர்பாக 16 வயதுச் சிறுவனும், 23 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நொற்றிங்ஹம்ஷைர் பொலிஸ் உயர்அதிகாரி ரோஸ் குக் தெரிவிக்கையில்; எமது அதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருவரைக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த கத்தியையும் மீட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நீதி வழங்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சினிவேர்ல்ட் இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்; எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமையாகும். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்தார்.
சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் நொற்றிங்ஹம்ஷைர் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.