Main Menu

தமிழகத்துக்கான பா.ஜ.க.வின் புதிய தலைவர் தொடர்பாக தகவல்

பா.ஜ.கவின் தமிழக தலைவர் நியமனம் இம்மாத இறுதிக்குள்  நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க.வில் நிர்வாகிகள் நியமனம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதுடன், குறித்த நிர்வாகிகளில், செயல்திறன் மிக்கவர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படும்.

அதனடிப்படையில், தமிழக பா.ஜ.க.தலைவராக 2014இல் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டு பதவி நீட்டிக்கப்பட்டதால் அவர் 5 ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த செப்டெம்பரில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பா.ஜ.க.தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்காலிகத் தலைவர் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க.நிர்வாகிகளின் 3 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைவதால் கிளைத் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் தேர்வு முடிந்ததும் மாநிலத் தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் கிளைத் தலைவர்கள் நியமனம் முடிந்து ஒன்றியத் தலைவர்கள் நியமனம் நடைபெறுகிறது.

அடுத்து மாவட்டத் தலைவர்கள் நியமனம் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத் தலைவர்கள் நியமனத்தை டிசம்பர் 15க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய மாநிலத் தலைவர் நியமனம் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் எனக் கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநிலத் தலைவர் பதவிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், நயினார் நாகேந்திரன், கே.டி.ராகவன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

மேலும், புதிதாக நியமிக்கப்படும் தலைவர் தலைமையில்தான் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டி உள்ள நிலையில், தலைவர் பதவியைப் பிடிக்க பா.ஜ.க.முக்கிய நிர்வாகிகளிடம் கடும் போட்டி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...