நீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்!
நீருக்கு அடியில் மறைந்திருக்கும் தங்களது கிராமத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிராமவாசிகள் சென்று பார்த்து வரும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு தற்போது அரங்கேறி வருகிறது. இது குறித்து தற்போது அறிந்து கொள்வோம்.
மேற்கு இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் சின்னஞ்சிறிய மாநிலமான கோவா, ஒரு காலத்தில் போர்த்துகீசியர்களின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. பின்னர் 1961ம் ஆண்டு இந்தியாவுடன் கோவா இணைக்கப்பட்டது.
இந்த மாநிலத்தில் உள்ள ‘குர்தி’ என்ற கிராமத்தில் சுமார் 600 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர் வசித்து வந்தனர். தற்போது இந்த கிராமம் நீருக்கு அடியில் சென்றுவிட்டது. கோடை காலத்தில் நீர் வற்றிய பிறகு அதாவது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த கிராமத்தினை நம்மால் பார்க்க முடியும். வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம், காவல்துறையினரின் செக்போஸ்ட் என பல்வேறு கைவிடப்பட்ட கட்டடங்களை பார்ப்பதற்கு வித்தியாசமானதாக தோன்றலாம். அந்த கிராமத்தின் இந்த நிலைக்கு காரணம் கிராமவாசிகளின் தியாக உணர்வு என்று கூட கூறலாம்.
மேற்குதொடர்ச்சி மலைகளாலும், சல்லூலிம் (Selaulim) ஆற்றினாலும் சூழப்பட்ட இந்த கிராமத்தில் 1986 வரை மக்கள் வசித்து வந்தனர். கோவாவின் முதலாவது முதலமைச்சர் தயானந்த் பந்தோத்கர் கோவா மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில், தெற்கு கோவாவின் குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சல்லூலிம் நீர்ப்பாசன திட்டத்தினை உருவாக்க எண்ணினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தெற்கு கோவாவின் நீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றாலும் அதன் காரணமாக குர்தி, சல்லூலிம் கிராமங்கள் நீரில் மூழ்கக்கூடிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
இருப்பினும் கோவா மாநிலத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அரசு நிறைவேற்ற முடிவெடுத்தது. இதற்கு கிராமத்தினரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டுக்கொடுக்க முன்வந்தனர். அவர்களுக்கு பக்கத்து கிராமங்களில் மாற்று இருப்பிட வசதி செய்து தரப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் சல்லூலிம் அணை கட்டப்பட்டது. இதுவே கோவா மாநிலத்தின் முதல் அணை என்பது சிறப்பாகும். இந்த அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டதால் இந்த கிராமங்கள் நீரில் மூழ்கின. இருப்பினும் வருடத்திற்கு ஒரு முறை, கோடை காலத்தில் நீர் வற்றும் போது ஏப்ரல், மே மாத காலகட்டத்தில் மட்டும் நீரில் மூழ்கியிருக்கும் குர்தி கிராமம் வெளிப்படும்.
குர்தி கிராமத்தில் வசித்த இந்துக்களும், கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இங்கு ஒன்றாக சேர்ந்து தத்தமது வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். தங்களது பிறப்பிடத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை செல்லும் இவர்கள் சந்தித்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்.
கோடை காலத்தை தொடர்ந்து நீர் சல்லூலிம் அணையில் நீர் வறண்டுள்ளதால், குர்தி கிராமம் தற்போது வெளியுலகுக்கு தெண்படுகிறது.
குர்தி கிராமத்தினரின் தியாகமும், உணர்வுப்பூர்வமான இந்த பிணைப்பும் காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது. எஞ்சியுள்ள கட்டட பகுதிகள் குர்தி கிராமத்தினரின் தியாகத்தை பறைசாற்றி வருவது குறிப்பிடத்தகக்து.