நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும்-மனோகணேசன்

2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பையேற்றபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேதமாசவிற்கு வழங்கி, அவரை வெற்றிபெறச்செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நோக்கிலான நிகழ்வொன்று இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
அந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாம் 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தோம். அவற்றில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவிற்கேனும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று தேர்தல்முறை மாற்றத்தைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்மால் இயலுமாக இருந்திருக்கிறது.
எனினும் ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் நாங்கள் ஆட்சியமைத்ததும் இவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
பகிரவும்...