Main Menu

ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – சஜித்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருணத்தில் மக்கள் முக்கிய தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். அது கடந்த 2015 ஆம் ஆண்டில் போராடிப்பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை தக்கவைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தி முன்நோக்கிப் பயணிப்பதா அல்லது நுளம்புகளைப் போன்று மக்களைக் கொன்ற ஏகாதிபத்தியவாதிகளிடம் ஆட்சியதிகாரத்தை மீண்டும் வழங்குவதா என்பது குறித்த தீர்மானமேயாகும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேதமாஸவிற்கு வழங்கி, அவரை வெற்றிபெறச்செய்வதற்கு தீர்மானித்துள்ளது. 

இந்நிலையில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நோக்கிலான நிகழ்வொன்று இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

எதிர்காலத்தில் நாங்கள் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே தவிர, அது தனியொரு குடும்பத்தினதோ அல்லது தனிநபர்கள் சிலரினதோ நலனை முன்னிறுத்தியதல்ல. 

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியத்திலிருந்து மீண்டு நாம் வெற்றிகண்ட சுதந்திரத்தை, இம்முறை தாரைவார்த்துக் கொடுத்துவிடக்கூடாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

பகிரவும்...