நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப் படுத்தும் அலங்கார வளைவு திறக்கப் பட்டது!
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இந்த அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூசைகள் இடம்பெற்றன.
இந்நிலையில், தைத்திருநாளான இன்று, நல்லூர் ஆலயத்திலிருந்து திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில் செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.
அத்துடன், தவில், நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது.
சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.