தைப்பொங்கல் – உலகெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாக கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சான்றோர் வாக்கின்படி, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தினர். மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் போகி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.
பொங்கலையொட்டி வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாடை உடுத்தி, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.