துப்பாக்கி சூட்டில் காவல் துறை அதிகாரி பலி
அக்குரஸ்ஸ பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற பொலிஸாரின் மீது சந்தேகநபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊருமுத்த பகுதியில் நேற்று புதன்கிழமை சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
தித்தெணிய – கனங்கே பிரதேசத்தைச் சேர்ந்த கலஹகே லொகுகே கசுன் எனப்படும் 77290 இலக்கத்தில் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அக்குரஸ்ஸ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்காக சென்ற போதே அவரால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி கபுருபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட லொகுகே தர்மசிறி என்ற சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதோடு, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.