திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி: முக ஸ்டாலின்
திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், வாக்களித்த மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
திமுக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. திமுக 6-வது முறையாக ஆட்சியமைக்கும் நிலையில், மு.க. ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
இந்த நிலையில் வாக்களித்த தமிழக மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி. தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பேன். திமுகவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த மாபெரும் வெற்றி.
எத்தனை சோதனைகள் – பழிச்சொற்கள் – அவதூறுகள்? – வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி. ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்!. வாழ்த்து தெரிவித்த தேசிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...