தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடத்தை தக்க வைத்த இந்தியர்கள்
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆண்டும் இந்தியர்கள் முதலிடத்தை தக்க வைத்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர் பணம் அனுப்பி உள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம் கோடி ஆகும்.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டாலர்கள் அனுப்பி உள்ளனர். மெக்சிகோ 36 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு பணம் வருவது கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு 62.7 பில்லியன் டாலர்களும், 2017ம் ஆண்டு 65.3 பில்லியன் டாலர்களும் பணம் வந்தது குறிப்பிடத்தக்கது.