தமிழக தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுத குவிந்த மாணவர்கள்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறு கிறது. நீட் தேர்வை தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 12 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கினாலும் 1 மணிக்குள் அனைவரும் வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தேர்வு ஹால் முன்பு வந்து முன்கூட்டியே காத்திருந்தனர்.
செல்போன், பென்சில், பேனா, ரப்பர் போன்ற எந்த பொருளையும் கையில் எடுத்துச் செல்லக்கூடாது என்று கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததுடன் ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் கடும் சோதனைக்கு பிறகே பரீட்சை ஹாலுக்குள் அனுமதித்தனர்.
இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டையும், ஆன்-லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த அதே புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர்.
இதற்காக பாஸ்போர்ட், ஆதார், பான்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கேட்டு வாங்கி சரிபார்த்தனர். அரைக்கை அணியாமல் முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையை கத்திரிக்கோலால் வெட்டி சரி செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.
‘பானி’ புயலால் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.