ஜப்பானின் புதிய மன்னருடன் பாப்பரசர் ஃபிரான்சிஸ் விசேட சந்திப்பு!
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தலைவர் பாப்பரசர் ஃபிரான்சிஸ், புதிய மன்னர் நருஹிட்டோவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சர்வதேச ரீதியாக வாழும் கத்தோலிக்க மதத்தவர்களின் மதகுருவான பாப்பரசர் ஃபிரான்சிஸ் தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்ட பாப்பரசர் ஃபிரான்சிஸ் நேற்று (திங்கட்கிழமை) ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
அங்கு இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அங்கு உரையாற்றிய பாபரசர் அணுவாயுதங்களை கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் ஜப்பானில் அண்மையில் முடிசூடிய மன்னரான நருஹிட்டோவை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இம்பீரியல் அரண்மனையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.
ஜப்பான் மன்னர் நருஹிட்டோவின் தாய், அரசி மிச்சிகோ கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.