சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. இதுதவிர சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்எல்ஏக்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை.
இக்கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத் தலைமை கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர தேர்தல் முடிவுகள் குறித்தும், பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் ஆலோசனை நடப்பதாக தெரிகிறது.