சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த ஹொங்கொங்!
ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கிடையில், சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமெனவும், சீன ஆதரவு அதிகாரிகள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் கோரி கடந்த 6 மாதங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஹொங்கொங்கே ஸ்தம்பித்து போயுள்ளது. இதற்கிடையில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள சிறுபான்மை உய்கர் இன முஸ்லிம்களுக்கு ஆதரவாக, ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில், சீனா அரசுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
சீன அரசால் உய்கர் இனத்தவர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், இந்த ஊர்வலம் சீனாவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஏற்கனவே ஹொங்கொங் வாசிகளின் போராட்டத்தினால் எரிச்சலடைந்துள்ள சீனா, இந்த ஊர்வலம் குறித்த எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
சீனா, சுமார் 3 மில்லியன் சிறுபான்மை முஸ்லிம்களை சித்திரவதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.