சிறுவர்களின் கல்விக்கு தீங்கு இழைக்கப் பட்டிருக்கிறது – பொரிஸ்
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்புதல் மனிதாபிமானக் கடமை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பேரால் காரணமாக பிரித்தானியாவில் பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலகமான டவுனிங் ஸ்ட்ரீட், பிள்ளைகளின் கல்வி நடவடிக்ககையில் தீங்கிழைக்கப்பட்டிருக்கிறது எனப் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரித்தானியாவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அபாயகரமானது என பிரித்தானிய புத்திஜீவிகள் தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் முடக்கங்கள் அமுல்ப்படுத்தப்பட்டால் பாடசாலைகளே இறுதியாக மூடப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 763 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 46 ஆயிரத்து 566 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.