சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டார் ; சாட்சியத்தில் ஹிஸ்புல்லா
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாரா ளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார்,
அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு:
கேள்வி:- உங்களின் அரசியல் பயணம் குறித்து கூறுங்கள்?
பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக எனது அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானேன். பின்னர் பல வெற்றி, தோல்விகள் எனக்கு அமைந்தன. பிரதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளேன். பின்னர் ஜனவரி நான்காம் திகதி இராஜினாமா செய்யப்பட்டு கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டேன்.
கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் “இலங்கையில் நாங்கள் சிறுபான்மை, உலகில் பெரும்பான்மையினர் நாம்தான்” என நீங்கள் கூறியது சரியா?
பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள் அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர். அன்றாட வாழ்க்கை அனைத்துமே ஸ்தம்பிக்கப்பட்டு இருந்தது. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி முகத்திடலில் இடம்பெறும். இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சமடைய வேண்டாம் எனக் கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன். இதன்போதே நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் எனக் கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டன.
கேள்வி:- நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா?
பதில்:- நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில் நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே கூறினேன்.
கேள்வி:- சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா?
பதில் :- ஆம் சந்தித்தேன்.
கேள்வி:- எப்போது என்ன நோக்கத்தில் சந்தித்தீர்கள்?
பதில்:- கூறுகிறேன். 2015ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு முடிந்தவுடன் அவர் எம் அனைவரையும் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தார். அப்போது அவர் நல்ல மதவாதி. குறிப்பாக இளைஞர்கள் அவருடன் இருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் எம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் ஏனைய பலரும் வந்தனர்.
கேள்வி:- அரசியல்வாதிகளைக் கூப்பிட்டு பேசும் அளவிற்கு யார் இவர்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் ஏன் இவருக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்? அவருக்கு அனைத்து கட்சிகளையும் சந்திக்க இருந்த நோக்கம் என்ன?
பதில்:- அப்போது அவர் பயங்கரவாதி அல்ல, அவர் சிறந்த மதத் தலைவராக இருந்தார். அவருக்காக பல இளைஞர்கள் பின்புலத்தில் இருந்தனர். ஆகவே வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அவர் தேவைப்பட்டார்.
கேள்வி:- நீங்கள் அவரைப் பயங்கரவாதி என ஏற்கமாட்டீர்களா?
பதில்:- அவர் பயங்கரவாதி தான். அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த காலத்தில் அவர் மதத் தலைவர். இளைஞர்கள் அனைவரும் அவருடன் இருந்தனர். பல உடன்படிக்கைகள் அவரினால் போடப்பட்டன.
கேள்வி:- என்ன உடன்படிக்கை ?
பதில்:- தேர்தல் கூட்டங்களில் பாடல் ஒலிபரப்ப முடியாது. பெண்கள் கூட்டங்களுக்கு தனியாக வர வேண்டும் என்பதாகும். வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டோம்.
கேள்வி:-தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள எந்த உடன்படிக்கையையும் செய்வீர்களா?
பதில்:- அவர் அப்போது பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மதத்தலைவர். அவர் பயங்கரவாதி என்றால் நாம் ஏன் சந்திக்க போகின்றோம்? அப்படி செய்ய மாட்டோம். அது மட்டுமல்ல அதன் பின்னர் எனக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்தார். 2015 காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டேன். அதில் இருந்து எனக்கு எதிராகவே அவர் செயற்பட்டார்.
என்னை அவர் 2000 வாக்குகளால் தோற்கடித்தார். அந்த சந்திப்பின் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை. ஏனெனில் அவர் எனக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களைச் செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிரசாரம் செய்தார். நான் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் என்னை தேசிய பட்டியலில் இணைக்க வேண்டாம் எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தார். என்னுடன் சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்பார்கள். அவர்களை இவர்கள் தாக்கினர். இது தொடர்பில் வழக்கு தொடுத்துள்ளேன். இதில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து எனக்கு எதிராக பல எதிர்ப்புகள் வந்தன.
இந்தியாவில் கேலிச் சித்திரம் ஒன்றை எடுத்து அதில் எனது முகத்தைப் பொருத்தி முகப்புத்தகத்தில் விமர்சனம் செய்தனர். அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்கொலை தாரியாவார். என்னை மட்டும் அல்ல எனது குடும்பத்தையும் விமர்சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரைத் தேடுவதாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவரது குழுவைக் கைதுசெய்ய வேண்டும் என நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை. எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தினர் பலருடன் இவர் தொடர்பில் இருந்தவர்.நியாஸும் அவ்வாறு இருந்தார்.
கேள்வி:- இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?
பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும் இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார். இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதைப் பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
கேள்வி:- இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து?
பதில்:- ஆம். 2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார்.
கேள்வி:- நீங்கள் எந்த கட்சியில் அப்போது இருந்தீர்கள்?
பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராக களமிறங்கினேன்.
கேள்வி:- சஹ்ரானின் அழைப்புக்கு செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன?
பதில்:- வாக்கு பலம் தான்
கேள்வி:- நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால் அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர் என நினைகிறீர்கள்?
பதில்:- இரண்டாயிரம், மூவாயிரம் வாக்குகள், அப்போது நான் மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஊரில் மூவாயிரம் வாக்குகள் உள்ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்சாளர். ஆகவே அது பலம் தான்.
இதற்காக மட்டும் அல்ல இவரை தவிர வேறுவேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத்துடன் பேசினேன். பத்தாயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது. அவர்களிடம் ஆயிரம் வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் பேசுவோம்.இது சாதாரண விடயம்.
கேள்வி:- சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா?
பதில்:- ஆம், சஹ்ரான் எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம் அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவார்.
கேள்வி:- அப்படி என்றால் அவருக்கு அனுமதி கிடைக்குமா?
பதில்:- ஆம், சகல சலுகைகளையும் பெற்றார்.
கேள்வி:- அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக வெறுப்புணர்வையும் ஏற்படுத்தினார். அப்படியா?
பதில்:- ஆம், அவர் மத ரீதியில் தாக்குதல் நடத்துவார். 2010-, 2011 காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விடயங்களைக் கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மதவாதியாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்திருக்கவேண்டும்.
கேள்வி:- நீங்கள் ஐ.எஸ். அமைப்பை எதிர்க்கின்றீர்களா?
பதில்:- ஆம். நான் அதனை பாராளுமன்றதில் கூட சிறப்புரை ஒன்றில் தெரிவித்தேன்.
கேள்வி :- நீங்கள் அவருடன் இணைந்து செயற்பட்டீர்கள் தானே?
பதில்:- ஆரம்பத்தில் எனக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினார், ஆனால் நான் தோற்கடிக்கப்பட்டேன்.
கேள்வி:- இவர் பயங்கரவாதியாக மாறுவார் என நினைத்தீர்களா?
பதில்:- இவர் பயங்கரவாதியாக மாறுவார் என நான் நினைக்கவில்லை. செய்தியில் பார்க்கும் வரையில் நான் நினைத்துக்கூட பர்க்கவில்லை.
கேள்வி:- பாடசாலை நிகழ்வொன்றில் முரண்பாடுகள் ஏற்பட்டன தானே?
பதில்:- ஆம், மீரா பாலிகா வித்தியாலயத்தில் மாணவிகள் கலாசார நடனம் ஆடிய காரணத்திற்காக அந்த இடத்தில் மேடை போட்டு மோசமாக தாக்கினார்.
கேள்வி:- தாக்கினார் என்றால்?
பதில்:- திட்டினார்.
கேள்வி :- அதற்கும் ஒலிபெருக்கி பொலிஸாரின் அனுமதியுடன் வழங்கப்பட்டதா?
பதில் :– ஆம், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர் இந்த செயற்பாட்டை செய்தார்.
கேள்வி :- அவர் ஒவ்வொரு குழுவில் இணைந்து வெளியேற என்ன காரணம்?
பதில்:- அவர் அங்கு சென்றால் அவர்களின் அமைப்பு பிழை என கூறி இதை ஏற்றுகொள்ள முடியாது என விவாதிப்பார். முடியாத நிலையில் அவர்களே இவரை நீக்கிவிடுவர்கள்.
கேள்வி :- அப்படியென்றால் எதை சரியென கூறுவார் ?
பதில் :- அவர் மத விடயங்களில் இவ்வாறு நடந்துகொள்வார். சில விடயங்கள் தவறு இதனை இவ்வாறு செய்ய வேண்டாம் என கூறுவார்.
கேள்வி:- ஏனைய மதங்களை விமர்சிக்கவில்லையா ?
பதில் :- எனக்கு தெரிந்த அளவில் அவர் அவ்வாறு செய்ததாக தெரியவில்லை.
கேள்வி :- உங்களில் இருந்து அவர் முரண்பட என்ன காரணம்?
பதில் : -இசைத்த காரணத்தினால்
கேள்வி : இசையா ?
பதில் :- ஆம் நாம் இசை போட்ட காரணத்தினால் தான் இதனை செய்தார்.
கேள்வி :- அவர் இணைந்த குழுக்களில் இசை போடவில்லையா?
பதில் : அது தெரியவில்லை
கேள்வி :- உங்களிடம் இருந்து விலக இசை காரணமாக இருக்காது
பதில் :- ஆம் என்னுடன் சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் முழுமையாக என்னுடன் உள்ளனர்.
கேள்வி : சஹ்ரான் சூபிக்கு எதிரானவரா?
பதில் :- ஆம், முழுமையாக எதிர்ப்பு
கேள்வி :- அப்படி என்றால் ஏன் உங்களை அழைத்தார்
பதில் :- இல்லை அனைவருக்கும் அழைப்பு விடுத்ததைப் போல எனக்கும் அழைப்பு விடுத்தார்.
கேள்வி :- இறுதித் தேர்தலில் உங்களுக்கு அவர் உதவவில்லையா ?
பதில் :- இல்லை, அவர் பிடியாணையில் இருந்தார்?
கேள்வி :- சஹ்ரானுக்கு எதிராக பயங்கரவாத குற்ற முறைப்பாடுகள் செய்தீர்களா ?
பதில் :- பயங்கரவாதி சஹ்ரானை நான் ஒருபோதும் சந்திக்கவில்லை. எனக்கு தெரிந்தது மத தலைவரான சஹ்ரான். அவரது மத செயற்பாடுகளுடன் முரண்பட்டு முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால் பயங்கரவாதி என நான் எந்த முறைப்பாடும் செய்யவில்லை. எனக்கு தெரியவில்லை, அவரிடம் பயங்கரவாத செயற்பாடுகள் இருந்தது தெரிந்திருந்தால் நான் தான் முதலில் முறைப்பாடு செய்திருப்பேன்.
அவர் கொல்லப்பட்டதில் உலகத்தில் அதிக மகிழ்ச்சியில் உள்ளது நான் தான். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது அவர்கள் தான். இவர்களால் எனக்கு வாக்கு இல்லாது போனது. ஆகவே இப்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.
கேள்வி:- இந்த சம்பவம் அனைத்தும் காத்தான்குடியில் தான் நடந்தன. அது உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் பல இவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளன. உங்களுக்கு ஏன் தெரியவில்லை.
பதில்:எனக்கு அவர் பயங்கரவாதி என தெரியாது. இவ்வாறு கொலைகார அமைப்பு இவரிடம் இருந்தது என எனக்கு தெரியாது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அவர் ஊரில் இருக்கவில்லை எனக்கு ஒன்றும் தெரியாது.
கேள்வி:- சஹ்ரானின் குடும்பத்தினர் பற்றி உங்களுக்கு தெரியாதா?
பதில் : தெரியாது
கேள்வி:- சஹ்ரானின் ஏனைய உறுப்பினர்கள் பற்றி தெரியாதா?
பதில் :- சிலர் மீது பிடியாணை விடுக்கப்பட்டது. தற்கொலை தாரிகள் சிலர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஊரில் இருக்கவில்லை. சில மாற்று குழுக்கள் அவர்களின் பள்ளியை நடத்தினர்.
கேள்வி : -அவர்களும் அடிப்படைவாதிகளா
பதில் : ஆம் அவர்களும் அடிப்படைவாதிகள்தான், மத ரீதியில் இறுக்கமான கொள்கை கொண்டவர்கள். அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேள்வி :- திகனை சம்பவத்தின் பின்னர் சஹ்ரானின் வீடியோ காட்சிகளில் அவர் பெளத்த விகாரை தாக்குதல் குறித்து பேசியுள்ளார் பார்த்தீர்களா ?
பதில் :- ஆம் பார்த்தேன்.
கேள்வி :- எப்போது?
பதில் :- இந்த தாக்குதலின் பின்னர் தான் அவற்றை நான் பார்த்தேன்.
கேள்வி:- நீங்கள் ஆளுநராக இருந்த காலத்தில் இது குறித்து எதையும் கூறினீர்களா?
பதில் : இல்லை.
கேள்வி : உங்களுக்கு யாரும் கூறினார்களா?
பதில் : இல்லை தாக்குதல் நடக்கும் வரை தெரிவிக்கவில்லை.
கேள்வி : மோட்டார் சைக்கிள் வெடிக்கப்பட்ட போது ஆளுநர் நீங்கள், நீங்கள் எதனையும் தெரிந்திருக்கவில்லையா?
பதில் : -உண்மையில் பாலமுனை பகுதியில் இடம்பெற்றது. நான் காத்தான்குடி பொலிஸாரிடம் கேட்டேன். விசாரணை நடத்துவதாக கூறினார்கள். எனக்கு இது இலக்காக இருக்கலாம் என்றும் எனது பாதுகாவலர் கூறினார். என்னைப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
கேள்வி : யாருடைய இடம்
பதில் :அது தெரியாது
கேள்வி:வவுணதீவு சம்பவம், அது பற்றி என்ன நினைகிறீர்கள் ?
பதில் : அது ஒரு சம்பவம், அது எனக்கு தெரியாது. அப்போதும் நான் பொலிஸிடம் கேட்டேன். மாவீரர் தினம் நடக்க ஒருநாள் இருந்தது. ஆகவே இது அந்த சம்பவத்துடன் தொடர்புபட்டது என்றனர். அதற்கு அப்பால் சிந்திக்கவில்லை.
கேள்வி: பின்னர் அறிந்துகொள்ள முடிந்ததா ?
பதில் :ஆம், சஹ்ரான் குழு செய்ததாக தெரியவந்தது.
கேள்வி :- வெடிபொருள் அந்த ஊரில் உள்ள எவராவது சிலரால் வழங்கி இருக்க முடியும் என நீங்கள் நினைக்கவில்லையா?
பதில்:- அது குறித்து விசாரணைகள் நடக்கின்றது. எவ்வாறு கிடைக்கப்பெற்றது. என்றது தேடப்பட்டு வருகின்றது
கேள்வி :- ஏனைய கட்சியினர் வந்ததாக கூறினீர்கள் அவர்களும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பார்கள் என நினைக்கின்றீர்களா ?
பதில்: இல்லை அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. காத்தான்குடியில் எந்த அரசியல் தலைவர்களும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்று உறுதியாக கூறுவேன்.
கேள்வி:- காத்தான்குடி அடிப்படைவாத பகுதி என நம்புகிறீர்களா?
பதில் :- இல்லை
கேள்வி :- காத்தான்குடியில் எத்தனை மொழிகள் ?
பதில் : மூன்று மொழிகள்
கேள்வி :-அரபு மொழி ஏன் அங்கு?
பதில் :இங்கு மூன்று மொழிகள் உள்ளன. அரபிக் இங்கு இல்லை. ஆனால் சுற்றுலா துறைக்காக அரபிகள் வருவதால் எமக்கு அவர்களைக் கவர வேண்டும். அதற்காக நாம் இதனை செய்யவேண்டும். இது சட்ட விரோதமோ அரசியல் அமைப்பிற்கு மாறானதோ என நினைக்க முடியாது.
கேள்வி :- அரபிகள் ஏன் அரபி எழுத்தை பார்த்து வருகின்றனர். வேறு நாடுகளில் எமக்கு அப்படி இல்லையே?
பதில் :- அப்படி அல்ல, நாம் சுற்றுலாத் துறையை கவர இவற்றை செய்கின்றோம். கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் பெற்றோம்.
கேள்வி : -காத்தான்குடியில் ஈச்சம் மரம் நட என்ன காரணம்?
பதில் :- உண்மையில் காத்தான்குடியில் மரம் நட சில தீர்மானம் எடுத்தேன். பசியாலைக்கு சென்ற போது வேறு சில மரம் நட தீர்மானம் எடுத்தோம். ஆனால் எமது பிரதேச காலத்திற்கு ஏற்ப இவை சரிவரவில்லை ஆகவே ஈச்சம் நடலாம் என தீர்மானம் எடுத்தோம். எமது பிரதேச வெப்பத்துக்கு அமைய தீர்மானம் எடுத்தோம்.
கேள்வி: ஏன் பனைமரம் தெரிவுசெய்யவில்லை?
பதில் :- ஈச்சம் மரம் தெரிவு செய்தோம். பனை மரமும் நடலாம்
கேள்வி: இதனை அகற்றுவதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மாற்ற நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகின்றதே?
பதில்:-இது குறித்து வழக்கு இருப்பதால் நான் கருத்து கூறவில்லை
கேள்வி :- பாராளுமன்றத்தில் நீங்கள் கூறிய கருத்துக்கள், இரத்த வெள்ளம் ஒன்று வரும் என்றீர்கள், சஹ்ரானும் அதனைக் கூறினார். அதேபோல் போராடுவோம் என்றீர்கள். இதெல்லாம் பாராளுமன்றத்தில் கூறினீர்கள்?.
பதில் :-வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி சிலர் பேசும் போதோ வடக்கு கிழக்கை இணைக்க நாம் விடமாட்டோம். அவ்வாறு பலவந்தமாக இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறினேன். இந்த இணைப்பை விடமாட்டோம். அதற்கு ஏதிராக ஆயுதம் எடுப்போம் போராடுவோம் என்று கூறினேன்.
கேள்வி:- வடக்கு – கிழக்கு இணைந்தால் ஆயுதம் ஏந்துவீர்கள் என்கின்றீர்களா?
பதில் :_ஆம், நான் அல்ல எமது இளைஞர் கள்.
கேள்வி: இப்போது கூறினீர்கள், நீங்கள் என?
பதில் ஆம்,
கேள்வி :-இது ஒரு அச்சுறுத்தல், ஜனநாயகத்தை கையாளாது வன்முறையை கையில் எடுப்பதாக கூறுகின்றீர்கள், நீங்கள் இல்லை என்றும், முஸ்லிம்கள் என்றும் கூறுகின்றீர்கள். முஸ்லிம்கள் ஆயுதம் எடுத்து வன்முறையை கையில் எடுப்பார்களா?
பதில்:- நான் கூறுவது, முஸ்லிம்கள் வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள். அதை செய்தால் இது நடக்கும் என்றேன்.
கேள்வி :- ஆயுதம் எடுப்பதாகவா?
பதில் :- ஆம், மக்கள்.
கேள்வி :- ஆகவே நீங்கள் வன்முறையை கையில் எடுக்கின்றீர்கள் நீங்கள் அச்சுறுத்தல் விடுதுள்ளீர்கள்?
பதில் :- எமது பொறுப்பு இவற்றை அனுமதிக்கக்கூடாது என்பது. ஆகவே இது நடக்க கூடாது என்று தான் நான் கூறினேன்.
கேள்வி: சஹ்ரானின் பாதுகாப்பு இல்லம் பற்றி தெரியுமா ?
பதில் :-இல்லை
கேள்வி:- மாகாண சபை பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்ற கோரிக்கை விடுதீர்களா?
பதில் ஆம், அவ்வாறு விடுத்தேன்.
கேள்வி:- ஆளுநராக நீங்கள் இருந்த காலத்தில் மாகாண சபை கலைக்கப்பட்ட நேரத்தில் இந்த கோரிக்கை விடுத்தது சரியா?
பதில்:- அப்படி அல்ல, முன்னரும் இவ்வாறு சில விடயங்கள் இடம்பெற்றன. நான் தனியாக தீர்மானம் எடுக்கவில்லை. நான் அனுமதி வழங்குவது வழமை.
கேள்வி :- ஆளுநராக இருந்துகொண்டு பாடசாலைகளை மத்திய அரசுக்கு கொடுக்க நடவடிக்கை எடுத்தது ஏன் ?
பதில் :-பணம் இல்லை, நடத்த முடியாது ஆகவே சிக்கலில் இருந்தது. அபிவிருத்தி செய்யும் போது இவற்றை கருத்தில் கொண்டேன். இது நான் மட்டும் செய்யவில்லை.
குழு: -மாகாணசபையை பலவீனப்படுத்துகிறீர்கள். இது முறைப்பாடாக கூறவில்லை.
கேள்வி :- ஹிரா நிறுவனம் பற்றி கூறுங்களேன் ?
கேள்வி :-எவ்வளவு நிதி வந்தது
பதில் :- முன்னூற்று ஐம்பது மில்லியன்
கேள்வி: கிழக்கு பல்கலைக்கழக்கம் ?
பதில்:- நாம் எந்த இன மத அடிப்படையில் பார்த்தும் எடுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை முஸ்லிம் மாணவர்கள் வந்தனர்.
கேள்வி: மகாவலி அபிவிருத்தி இடம் ஒன்றினை நீங்கள் பெற்றீர்கள் ஏன்?
பதில்:- ஆம், தற்காலிகமாக நிறுவனம் ஒன்றே இருந்தது, ஆகவே நிரந்தரமாக ஹீரா நிறுவனத்தை அமைக்க இதனை கோரினோம். அதன் பின்னர் உயர் கல்வி நிறுவனமாக நாம் கோரிக்கை அறிக்கை ஒன்றினை உயர் கல்வி அமைச்சுக்கு விடுத்தோம். இதில் சில முன்மொழிவுகளும் இருந்தன. ஆகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் ஆவணங்கள் தயாரித்து மகாவலி நிறுவன நிலத்தை பெற்றுக்கொண்டோம். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசினால் அனுமதி கிடைக்கப்பட்டது. 35 ஏக்கர் இருந்தது.
கேள்வி:- நீங்கள் வகாப் வாதத்தை ஆதரிகின்றீர்களா ?
பதில் :- இல்லை, ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
கேள்வி :- கிழக்கு பல்கலைக்கழகம் ஷரிஆ பல்கலைக்கழகமா?
பதில்:- அவ்வாறு ஒன்றும் இல்லை, நான் இதனை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க சகல விதத்திலும் தயாராக உள்ளேன். ஆனால் ஊடகங்கள் இதனை தவறுதலாக விமர்சித்து வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக அதிகாரிகள் சிங்களவர்கள். அவர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. சிலர் தனியார் பல்கலைக்கழகத்தை விரும்பவில்லை. சைட்டம் மூடப்பட்டது. அதுபோன்று எங்களையும் இலக்கு வைக்கின்றனர். நான் எந்த இணக்கத்துக்கும் தயாராக உள்ளேன். இது எமது அப்பாவி மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஒரு சமூக சேவையாக இதனை பார்க்கிறேன். எமது மக்களுக்காக நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன்.
கேள்வி :- ஹிரா மூலம் எத்தனை பள்ளிவாசல் உருவாக்கப்பட்டது
பதில் :- நிறைய அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி :- சவூதி நிதி வருகின்றது, அவர்கள் சூபிக்களுக்கு ஆதரவு வழங்குவது இல்லையே ?
பதில் :- அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் நிதி எனக்கு வருகின்றது. எனக்கு பிரிவினை முக்கியம் இல்லை. மக்களின் சேவகனாக நான் சேவை செய்கின்றேன். தமிழ் மக்களுக்கும் உதவி செய்துள்ளேன்.
கேள்வி :- அப்துல் ராசிக் யாரென்று தெரியுமா
பதில் :ஆம்
கேள்வி : அவருடன் உங்களின் பழக்கம் எப்படி?
பதில் : தொலைபேசியில் பேசியுள்ளோம். இந்த பிரச்சினைகளின் பின்னர் பேசினார். இரு தினங்களுக்கு முன்னரும் பேசினேன்.
கேள்வி :- அவருடன் உங்களுக்கு நெருக்கமான நட்பு உள்ளதா?
பதில் :-அப்படி என்று இல்லை, இந்த பிரச்சினைக்கு பின்னர் பேசினோம்.
கேள்வி :அவர் ஐ.எஸ். கொடிகளுடன் கிழக்கில் செயற்பட்டாரா?
பதில் :அப்படி ஒன்றும் எனக்கு தெரியாது
அவர் ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளதாக இங்கு வந்த இருவர் கூறினார்கள்?
பதில் :- அவற்றை நான் கேட்டதில்லை, ஆனால் தௌவ்ஹித் என்ற பெயருக்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒருவர் பயங்கரவாதி என்றால் அவரை விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதி என கூற முடியாது. ராசிக் ஐ.எஸ். என்று எனக்கு தெரியாது.
கேள்வி :- சஹ்ரான் போன்று எத்தனை பேர் உள்ளனர்?
பதில்:- இருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அறிந்துகொள்ள முடிந்தது.
கேள்வி :- இந்த தாக்குதல் நடக்கும் வரை சஹ்ரான் அச்சுறுத்தலானவர் என்று தெரியவில்லையா?
பதில்:- இல்லை, இப்போது தான் தெரியும்.
கேள்வி:- உங்களின் பாதுகாப்புக்கு உள்ளவர்கள் கூறவில்லையா ?
பதில் :- இல்லை, அப்படி ஒன்றும் தெரிவிக்கவில்லை.
கேள்வி :- காத்தான்குடியை அரபு மயமாக்கியது நீங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனை இல்லை என்கிறீர்களா?
பதில்: இது அரபு மயம் அல்ல. எமது மக்களின் அடையாளம் அவ்வாறு உள்ளதால் அதனுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்டடக்கலை தானே? யாழில் இந்து கலாசார முறைமை உள்ளது, தெற்கில் பெளத்த முறைமை உள்ளது. அது போன்று தான்.
கேள்வி:- சஹ்ரான் கட்டளைகளை விதித்த காலத்தில் கூட உங்களுக்கு அவரின் நிலைமை புரியவில்லையா?
பதில்:- அவர் அடிப்படைவாதிதான். ஆரம்பத்தில் இருந்து அவர் அடிப்படைவாதி என்று தெரியும். ஆனால் அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியாது.