சர்வாதிகார இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடே சரத் வீரசேகரவின் கருத்து- மாவை
விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டிருக்கும் அவர் இவ்வாறு இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கினால் அதற்கு கூட்டமைப்பே பொறுப்புக்கூற வேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அவருடைய உரை தொடர்பில் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, தமிழ் மக்களின் விடுதலை உணர்வினையும் கொள்கையினையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசாங்கங்களினாலும் அழித்துவிடமுடியாது என்றும் குறிப்பிட்டார்.