கைபேசியைச் சரியாகக் கையாளுகிறோமா?
அறிவியலில் இன்றைய கண்டு பிடிப்புகளிலே வியக்கத்தக்க அதிசயக் கருவிகளுள் ஓன்று நாம் கையாளும் கைபேசி ஆகும். இன்றைய இளைஞர்களின் சட்டைப் பாக்கட்டில் பணம் இருக்கிறதோ, இல்லையோ கைபேசி மட்டும் இல்லாமல் இருக்காது. அதேபோல் இளம் பெண்கள் கைப்பையில் மேக்கப் சாதனங்கள் இருக்கிறதோ, இல்லையோ கைபேசி இல்லாமல் இருக்காது. தற்போது கைபேசியானது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது. கைபேசியைப் பொறுத்தவரை நமது வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது
.
அனைவராலும் கையாளப்படும் கைபேசியை மக்கள் சரியான முறையில் பயன்படுத்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். நம்மில் சிலபேர் கைபேசியில் பேசுவதற்கு ஆரம்பித்தால், மணிக்கணக்கில் தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப் பேசிய விபரம் என்ன என்று அவர்களிடம் கேட்டால், அவர்களுக்கே தாங்கள் என்ன பேசினோம் என்று தெரியாது என்றுதான் கூறுவார்கள். அவர்கள் மணிக்கணக்கில் பேசியதில் முக்கியமான தகவல் ஏதும் இருக்காது. தற்போது மக்கள் தங்கள் வீட்டில் ஒருவர்க்கொருவர் நேரில் சந்தித்து, கலந்து சிரித்துப் பேசுவதைக் காட்டிலும் , தங்களது கைபெசியில்தான் தேவையில்லாமல் அதிகமாகக் பேசிகொள்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
.
கைபேசியை வீட்டில் மட்டுமா பயன்படுத்துகிறார்கள். வீடு, கோவில் , அலுவலகம், தொழிற்சாலைகள், கடைகள், பேருந்துகள், பேருந்து நிறுத்தம் ,கோவில் குளம் ஏன் கைபேசியைப் பயன்படுத்தாத இடங்களே இல்லை என்று கூறலாம். வாகனங்களை ஓட்டிக் கொண்டு செல்லும்போது, கைபேசியில் பேசிக்கொண்டு செல்லாதீர்கள் என்று அரசு வலியுறுத்தி கூறினாலும், அதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை. அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய காவல்துறையினரில் சிலபேர் அதனைக் கடைபிடிப்பதில்லை என்பதைப் பார்க்கும்போது ,நாம் வருத்தப்படவேண்டிய விஷயமாகும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் செல்லும்போது கைபேசியில் யாரும் அழைத்தால் , வாகனத்தைச் சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, கைபேசியில் அவர்களிடம் பேசலாம். அல்லது பேச நேரமில்லாமல் இருந்து தாங்கள் அவசரமாக செல்ல வேண்டுமெனில் , கைபேசியின் மூலமாக சம்பந்தப்பட்ட நபரிடம் ‘பிறகு பேசுகிறேன்’ என்ற தகவலைத் தெரிவித்து விட்டு தொடர்பைத் துண்டித்து விடலாம். இதனால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் சாலை விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
கைபேசியில் பேசிக்கொண்டே சாலைகளைக் கடப்பது உயிர்க்கே ஆபத்தாக முடியும் என்பதை நாளேடுகளில் நாள்தோறும் வரும் நிகழ்வுகளைப் படித்தாலும், கைபேசியில் பேசிக்கொண்டே சாலைகளைக் கடப்பது என்பதைத்தான் பெரும்பாலும் கடைபிடிக்கிறார்கள். பேசவேண்டியது அவசியயெனில் சாலை ஓரத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நின்று கொண்டு கைபேசியில் பேசிவிட்டு நிதானமாக செல்லலாம். இதனை யாரும் கவனத்தில் கொள்வதுமில்லை கடைபிடிப்பதுமில்லை . தற்போது சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கும் நாம் சாலைவிதிகளையும் மதிக்காமல் நமது கைபேசியைச் சரியான முறையில் கையாளப்படாததும் ஒரு காரணம் என்பதையும் அனைவரும் உணரவேண்டும்
.
பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள், நம்மில் சிலபேர் கைபேசியில் பேசும்போது தான் ஒருவர் மட்டும்தான் அந்தப் பேருந்தில் பயணிப்பதுபோல் நினைத்துக் கொண்டு , தங்கள் வீட்டில் இருந்து பேசுவதுபோல் மிகவும் சத்தமாகவும் , பக்கத்துச் சீட்டில் உள்ளவரும் மற்றவர்களும் வெறுத்து முகத்தைச் சுழிக்கும்படியாகவும், தங்கள் குடும்பத்தின் சொந்தக்கதை சோககதையைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டே பயணிப்பார்கள். இவ்வாறு உரக்கக் கைபேசியில் பேசுவது மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்ற அடிப்படை அறிவில்லாமல்கூட பேசிக்கொண்டே பயணிப்பார்கள். மேலும் தான் உரக்க தங்கள் கைபேசியில் பேசுவதால், சிலநேரங்களில் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்
.
பொதுவாக கைபேசியின் மூலம் முக்கியமான தகவல்கள் அவசரமானத் தகவல்கள் ஆகியவற்றைத் தெரிவிக்கலாம். நலம்கூட விசாரித்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் அவ்வாறு பேசுவதில்லை. தங்கள் கைபேசியில் பொழுதுபோக்குக்கு பேசுவதுபோல் நினைத்துப் பேசுவார்கள். குறிப்பாக இளைஞர்கள் ,பெண்கள் வீட்டில் யாரும் இல்லை என்றால் தங்களுக்குப் பொழுதுபோகவில்லை எனில் கைபேசியை எடுத்துக் கொண்டு, கைபேசியில் மணிக்கணக்கில் தேவையில்லாமல் பேசுவார்கள். அவ்வாறு அதிக நேரம் கைபேசியின் மூலம் பேசினாலோ கேட்டாலோ ஏற்படும் அதிர்வலைகளினால் காதுகள் பாதிக்கப்படும் என்பதை தற்போது அறிவியல் ஆராய்ச்சியே தெரிவிக்கிறது.
கைபேசியில் தேவையில்லாமல் பேசுவதால் , தங்களை அறியாமலே வேண்டாத விசயங்களைப் பேசி, குடும்பத்திற்குள்ளும் உறவினர்களுக்கிடையே வீணான சண்டையும் குழப்பம் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. குடும்பத்தில் உள்ள முக்கியமான விபரங்களை சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரில் பேசினால், சூழ்நிலையை அறிந்து பேசிக்கூடச் சமாதானத்துடன் பேசலாம். ஆனால் அவர்கள் கைபேசியின் மூலம் பேசுவதால் எதிர்தரப்பில் பேசுவதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசி , உறவு முறைகள் கூட பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
அலுவலக நண்பர் ஒருவர் அலுவலகத்தில் இருக்கும்போது, அவரது மனைவி அவரிடம் கைபேசியின் மூலம் தான் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது, தன்னிடம் தகராறு செய்த பக்கத்து வீட்டுக்காரைப் பற்றி தெரிவித்தவுடன், அந்த நண்பர் உடனே தன்னோட மனைவியிடம் கைபேசியின் மூலம் பேசுகிறோம் என்பதையும், மறந்து, தெருவிலே தண்ணீர்க் குழாயடியில் எப்படி வாய்ச் சண்டையிட்டுக் கொள்வார்களோ. அதேபோலவே தன்னோட கைபேசியின் மூலம் மனைவிடம் பக்கத்து வீட்டுக்காரரை மிரட்டுவதுபோல் அநாகரீகமாகவும் உரக்கப் பேசினார் அந்த நண்பர் அவ்வாறு கைபேசியில் உரக்கப்பேசுவதால் யாருக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது என்பதை அந்த நண்பர் யோசித்துப் பார்க்கவில்லை.
கைபேசியைப் பயன்படுத்தும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் கைபேசியைப் பயன்படுத்துவது தவறு இல்லை. அதனை அவர்கள் கையாள வேண்டிய முறையில் பயன்படுத்த வேண்டும் தற்கொலை, கொலை பாலியல் தொந்தரவுகளுக்குக்க் காரணம், அவர்கள் தவறான முறையில் கைபேசியில் தேவையில்லாமல் பேசுவதுதான் என்பதை நாளேடுகளில் வரும் செய்திகளால் அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கைபேசி வாங்கிக் கொடுப்பது தங்களுக்குள் அவசரத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்குத்தான் என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்வதில்லை. ஆனால் பிள்ளைகளோ, பெற்றோர்களுக்குத் தெரியாமல் நேரங்கெட்ட நேரத்தில் சிநேகர்கள்/சிநேகிகள் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் கைபேசியின் மூலம் ஜாலியாக பேசி, ஆபததான விளைவுகளைச் சந்திக்கக்கூடிய நிலை ஏற்படுவதையும் நாளேடுகளில் வரும் செய்திகளால் அறிந்து கொள்ளலாம்
“ ஓடி விளையாடு பாப்பா “ என்று குழந்தைகளைப் பார்த்து பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பாடினார். ஆனால் இப்போது குழந்தைகள் கைபேசியின் மூலமாக கேம்மில்(Games) உட்கார்ந்து கொண்டு விளையாடுகிறது. குழந்தைகள் அனைவரும் ஆடி ஓடி விளையாடினால்தான் ஆரோக்கியமான முறையில் வளரமுடியும். இதனைப் பெற்றோர்கள் குழந்தைகளிடம் விளக்கிக் கூறவதில்லை. மாறாக் தங்கள் குழந்தைகள் இந்த வயதிலேயே கைபேசிகள் மூலம் கேம்மெல்லாம் தெரிந்துகொண்டு நன்றாக விளையாடுகிறான் தனக்குக்கூட தெரியாது என்றும் தங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமையாகவும் மற்றவர்களிடம் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.
கோவில்களில் கைபேசிகளைப் பயன்படுத்தாதீர்கள் அறிவிப்புக்கள் இருந்தாலும் அதனை சிலபேர் கடைபிடிப்பத்தில்லை. கோவிலில் வைத்து கைபேசியின் மூலம் பேசுவது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாகும் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. முன்பெல்லாம் கோவில் விழாக்களுக்கு சென்றால் கோவில் சப்பரங்களில் , தேர்களில் எழுந்தருளி வரும், உற்சவ மூர்த்திகளைப் பார்த்து பக்தியுடன் பரவசத்துடன் பக்தர்கள் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு வணங்குவார்கள். தற்போது தங்கள் கைபேசியில் உள்ள காமிரா மூலம் உற்சவ மூர்த்திகளைப் படம் பிடிப்பதற்கு, உற்சவ மூர்த்திகளைப் பார்த்து மக்கள கைபேசிகளுடன் இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
கைபேசியில் கவனக்குறைவாக செல்பி எடுக்கிறேன் என்று பேரில் உயிர் இழந்தவர்களும் உண்டு. குடிபோதையில் பாம்பைப் படம் எடுக்கிறேன் என்று பாம்பு கடித்து இறந்த நபர் உண்டு. அதேபோல் ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்கும்போதும் கடலில் குளிக்கும்போதும் கவனக்குறைவாக செல்பி எடுக்கும்போது இறந்தவர்களும உண்டு என்பதை நாள்தோறும் வரும் நாளேடுகளின் மூலம் படிக்கிறோம். . இவையெல்லாம் கவனக்குறைவாக கைபேசியைக் கையாளுவதால்தான் என்பதை மக்கள் உணர்வதில்லை.
உலகையே மனிதன் தன்னோட கைப்பிடிக்குள் கொண்டு வந்தது கைபேசிதான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். இதனை உணர்ந்து கொண்டு கைபேசியை அளவோடும், அவசரத்தேவைக்கும் அவசரத் தகவலுக்கும் மட்டும் கைபேசியைப் பயன்படுத்தி மகிழ்வோமாக.
பூ. சுப்ரமணியன்,
பகிரவும்...