ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று
இன்னிசை அரசி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக… வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட் பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவரை நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
தேசிய விருது பெற்ற சிறந்த பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம், தனக்கு “பிடித்த பத்து’ பற்றி கூறுகிறார்:
பெற்றோர்: என் தாய் தந்தையர் இருவரையும் என்னால் மறக்க முடியாது. அவர்கள் நடுத்தர வர்க்கத்தில் குடும்பம் நடத்தினாலும், அவ்வளவு குழந்தைகளையும் கொள்கையோடும், கோட்பாடோடும் வளர்க்கும் முனைப்போடு எங்களுக்கு பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அதனால்தான் இன்றும் என்னால் ஆடம்பரத்தை தவிர்த்து வாழமுடிகிறது.
காந்திஜி: சிறுவயது முதலே நான் காந்திஜியின் பக்தை. அவர் மறைந்தபோது வேலூரில் (அங்குதான் நான் பிறந்தேன்) நடந்த சிறிய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கு கொண்டு சிறுமியான நான் பாடினேன். அவரை நேரில் பார்த்து ஆசி பெற்று பேசமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு.
விவேகானந்தர்: என் மனதிற்கு மிக நெருங்கியவர். என் ஆத்ம குரு என்று கூட சொல்லலாம். அவரது பொன்மொழிகளை தினமும் படித்து, அதன்படி நடக்க முயல்வேன். அதனால்தான் என்னால் ராமகிருஷ்ண மடத்தோடு இணைத்து ஏராளமான நிகழ்ச்சிகளை கொடுக்க முடிந்தது. நாடு முழுவதும் ராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு துறவிகளை நன்கு அறிவேன்.
புத்தகங்கள்: என்னுடன் புத்தகங்கள் இருந்துவிட்டால் போதும், நேரம் போவதே தெரியாது. சான்றோர்களின் சுயசரிதைகள், தத்துவ புத்தகங்கள், உடல்நலம் சம்பந்தமான புத்தகங்கள், கலைநயம் பற்றி எடுத்துரைக்கும் புத்தகங்கள் என கிடைத்து விட்டால் மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருப்பேன்.
குழந்தைகள்: இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக நல்ல நெறிமுறைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி, பாடல்களும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க முயன்று வருகிறேன்.
சுவிட்சர்லாந்து: இயற்கை அன்னை தாலாட்டும் நாடு. அந்நாட்டு சீதோஷண நிலை என்னை வெகுவாக கவர்ந்திழுக்கும். இயற்கை அழகும், சுத்தமும், பசுமையான மரங்கள், செடி கொடிகள், கண்கவர் மலர்கள், பார்க்கும் எவர் மனதையும் கொள்ளை கொள்ளும். அங்கு வாழ்பவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்று பலமுறை நினைப்பதுண்டு.
டென்னிஸ்: எல்லா விளையாட்டுகளும் பிடிக்கும் என்றாலும் டென்னிஸ் என்றால் ஒரு வெறி. உலகில் உள்ள அத்தனை பிரபலமான டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் பெயர்களும் அத்துப்படி. பீட் ஸôம்ப்ரஸ், ரோஜர் பெடெரர்) இருவரையும், அவர்களது அபார விளையாட்டை தவிர, டென்னிஸ் மைதானத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் முறையும் என்னை அவர்கள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. ஸôம்ப்ரஸ் வாழும் “புளோரிடா’ நகரத்திலும் பாடி இருக்கிறேன். பெடெரர் இருக்கும் “பாஸல்’ என்ற சுவிட்சர்லாந்து நகரத்தில் இருமுறை இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்.
திரையிசை: “குட்டி’ என்ற ஹிந்திப் படத்தில் என்னை அறிமுகம் செய்தவர் திரு. வசந்த் தேசாய். அன்று தொடங்கி, இன்று வரை சுமார் 49 ஆண்டுகளாக பாடிக் கொண்டிருக்கிறேன். சிறந்த பின்ணணி பாடகிக்கான விருதை வாங்கி இருக்கிறேன். மேலும் பல விருதுகள் ஒவ்வொரு மாதமும் என்னை அழைத்து அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் திரையிசைத் துறையை மிகவும் நேசிக்கிறேன். மிகுந்த சந்தோசத்தோடு ஒவ்வொரு இசையமைப்பாளரோடும் பணிபுரிந்து வருகிறேன்.
மழை: வெள்ளம் போல் கொட்டும் மழையை, உள்ளத்தைத் தொடும், இதமான சாரலோடு நம்மை குளிர்வித்து, செடி கொடிகள், மரங்களையும் நனைத்து பசுமையாகும் மழையை யார்தான் விரும்ப மாட்டார்கள். மும்பையில் இருந்தபோது பருவமழையை அனுபவித்து ஆனந்தித்திருக்கிறேன். சென்னையில் அவ்வளவாக மழை இல்லையே என்ற ஏக்கம் உண்டு.
நல்லன எல்லாம்: எனக்கு நல்லன எல்லாவற்றின் மீதும் மிகவும் விருப்பம் அதிகம். பண்பட்ட மனிதர்கள், பெண்களை மரியாதையோடு நடத்துபவர்கள், காம பார்வை இல்லாமல் கனிவோடு பேசும் ஆண்கள், மழலை மாறாமல் பேசும் குழந்தைகள், படிக்காவிட்டாலும், நல்ல உள்ளதாலும், பண்பாலும், சொந்தத் திறமையாலும் வாழ்வில் உச்சம் தொட்டவர்கள், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் அள்ளிக் கொடுக்கும் செல்வந்தர்கள் என பலரையும் பிடித்தவர்கள் என்று கூறலாம். இவை தவிர இன்னும் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் பத்துதானே கேட்டீர்கள்.கொஞ்சம் கஷ்டம் தான்” என கூறி சிரிக்கிறார்.