எதிர்க்கட்சித் தலைவராக சஜித்? – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இணக்கம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்ததாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கம் தற்போது பதவியேற்றுள்ளது.
ஆனால் கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பல்வேறுபட்ட கருத்து முரணப்பாடுகள் ஏற்பட்டன.
இதனை அடுத்து, நாடாளுமன்ற கட்டளை சட்டத்தின் பிரகாரம், சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரையே எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்தும் கட்சிக்குள் இரு தரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடன் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன்போதும் அவர்கள் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஆதரவு வழங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.