Main Menu

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது

நாமக்கல் 

திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நிச்சயம் தேர்தல் நடக்கும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், வேறு வழியில்லாமல் தான் திமுகவினர் தேர்தலில் நிற்பதாக குறிப்பிட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியில் திமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதில் திமுக தொண்டர்கள்  இரண்டு சக்கர வாகனங்களில் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கொக்கராயன்பேட்டை, ஓடபள்ளி, வெப்படை உள்ளிட்ட16 ஊராட்சிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வழிநெடுக
வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரச்சாரத்தின்போது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் திமுக நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றதால் தாமதமாக நடப்பதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பஞ்சாயத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார். திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு, கட்சியை சார்ந்தவர்களும் பொதுமக்களும் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

நாகை 

நாகை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, அமமுக மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்களை கையில் ஏந்தியவாறு, வீடு வீடாகவும், வயல்களில் இறங்கியும் வாக்கு சேகரித்தனர்.

நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சி நடைபெறுவது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று கூறுவதற்கு பதில் எடப்பாடிக்கு பிடிக்கவில்லை என்று அமைச்சர் அப்போது தவறுதலாக குறிப்பிட்டார்.

தேனி 

தேனி மாவட்டத்திலும், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கருநாக்கமுத்தன் பட்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதிமுக எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன் வாக்கு சேகரித்தார். இதேபோன்று நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது சின்னங்களுடன் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.

சிவகங்கை 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரஸ்தா, சங்கராபுரம், சாக்கோட்டை ஆகிய பகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 2016ஆம் ஆண்டே நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல், அதிமுகவால் தள்ளி போடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர், தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மூக்கு கண்ணாடிகளை ஸ்டாண்டில் வைத்து வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கரூர்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம், வெண்ணைமலை, அருகம்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கடந்த முறை போல் இப்போதும், பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை கொடுக்கவிடாமல் திமுக நீதிமன்றம் சென்று தடுப்பதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.

கரூர் ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கிராமம், கிராமமாக திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

கோவை

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, சோழபாளையம் ஆகிய ஊராட்சிகளில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வாக்காளர்கள் மத்தியில் பேசியும் அவர் வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தற்போது ரூபாய் 72 கோடி செலவில் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்றுவருவதால் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று தெரிவித்தார்.

திருவள்ளூர் 

திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்  திருவாலங்காடு ஒன்றியத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காஞ்சிப்பாடி, கனகம்மாசத்திரம், கூலூர், மாவூர், இலுப்பூர், நாபுளூர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர், கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வாகனத்தில் சென்று திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது கிராமங்களில் மேளதாளத்துடன் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சாமு நாசர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலம்:

சேலம் அருகே செட்டிச்சாவடி பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மற்றும், ஒன்றிய குழு , ஊராட்சி வார்டு வேட்பாளர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்  திருவாலங்காடு ஒன்றியத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காஞ்சிப்பாடி, கனகம்மாசத்திரம், கூலூர், மாவூர், இலுப்பூர், நாபுளூர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர், கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வாகனத்தில் சென்று திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது கிராமங்களில் மேளதாளத்துடன் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சாமு நாசர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்:

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள காட்டூர், வடிவாய்க்கால், உள்ளிட்ட பகுதி களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், தேர்தல் நடத்தை விதி விலக்கிக்கொள்ளப்பட்டதும், பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.