இன்று சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பேச்சு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்து வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 5-ம் ஆண்டு கொண்டாட்டமான இன்று, ‘இதய ஆரோக்கியத்துக்காக யோகா’ என்ற கருத்தை மையமாக கொண்டு யோகா கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜார்கண்ட் ராஞ்சியில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி நமது கலாச்சாரத்தில் யோகா ஒரு பகுதியாக எப்போதும் இடம் பிடித்து வருகிறது என்றார்.

யோகாவின் பயன்களை உலக நாடுகள் அனுபவித்து வருவதாக தெரிவித்த அவர் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும் என்று கூறினார்.
மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம்; யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது என்றார். தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என்றார்.
ராஞ்சி பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் யோகா செய்து வருகின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.