Main Menu

ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் சுஜித்தை மீட்க முடியவில்லை- மதுரை மணிகண்டன் பேட்டி

ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் குழந்தை சுஜித்தை மீட்க முடியவில்லை என்று ரோபோட்டிக் எந்திரம் கண்டுபிடித்த மதுரை மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்-கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித். கடந்த 25-ந்தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சுஜித் அங்குள்ள ஆழ்குழாய்க்குள் தவறி விழுந்தான்.

84 மணி நேரமாக நடைபெற்ற தீவிர போராட்டத்துக்கு பின்னரும் அவனை உயிருடன் மீட்க முடியவில்லை. சடலமாகத் தான் மீட்க முடிந்தது.

குழந்தைகள் ஆழ்குழாய்க்குள் தவறி விழுந்தால் அவர்களை மீட்கும் ரோபோட்டிக் எந்திரத்தை வடிவமைத்துள்ளார். மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன். அவரும் குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சிக்கும் பலன் கிட்டவில்லை.

இது குறித்து மணிகண்டனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

நான் வடிவமைத்த ரோபோட்டிக் எந்திரம் மூலம் சங்கரன்கோவிலில் ஆழ்குழாயில் சிக்கிய குழந்தையை மீட்டேன். அதனை அடிப்படையாக வைத்து மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்குழாயில் சிக்கிய குழந்தை சுஜித்தை மீட்க வருமாறு திருச்சி கலெக்டர் என்னை அழைத்தார்.

அவர் பேசிய சிறிது நேரத்தில் மதுரையில் உள்ள தென்மண்டல தீயணைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து என் வீட்டுக்கு கார் வந்தது. 100 கி.மீ. வேகத்தில் சென்ற நாங்கள் இரவு 8 மணிக்கு நடுக்காட்டுப்பட்டியை அடைந்தோம்.

அங்கு சென்றதும் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினேன். குழந்தை சிக்கிக்கொண்ட ஆழ்குழாய் 4½ அங்குலம் இருந்தது. ஆனால் நான் வடிவமைத்துள்ள எந்திரம் 8 அங்குலம். இதனால் ஆழ்குழாய்க்குள் எனது ரோபோட்டிக் எந்திரத்தை செலுத்தி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை.

எனவே மணப்பாறையில் உள்ள லேத் பட்டறைக்கு ரோபோட்டிக் எந்திரத்தை எடுத்துச் சென்றேன். அங்கு அதன் அளவை 4½ அங்குலமாக குறைத்து எடுத்துக் கொண்டு மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட வந்தேன்.

 சுஜித்தை மீட்க மணிகண்டன் பயன்படுத்திய ரோபோட்டிக் எந்திரம்.

அதற்குள் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் நானும் இணைந்து என்னால் இயன்ற உதவிகளை செய்தேன்.

குழந்தை சுஜித் சிக்கிக்கொண்ட ஆழ்குழாயில் சிறிது கூட இடைவெளி இல்லாததால் ரோபோட்டிக் எந்திரத்தால் சுஜித்தின் தலைப்பகுதியை பிடிக்க முடியவில்லை.

நாங்கள் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்த போதே குழந்தை படிப்படியாக கீழே சென்று கொண்டிருந்தது. இதனால் எங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது.

குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போனது எனக்கு மிகவும் மனவேதனையை தந்தது. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. அப்படி ஏதும் சம்பவம் நடந்து விட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அளவுகளில் ரோபோட்டிக் எந்திரம் தயாரிக்க முடிவு செய்துள்ளேன்.

மேற்கண்டவாறு மணிகண்டன் கூறினார்.

பகிரவும்...