அமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் – பிரதமர் மோடி

தனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை டெக்சாசில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் மோடியுடன் இணைந்து அதிபர் டிரம்பும் பங்கேற்கிறார். அதன்பின், இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.
இதையடுத்து, மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 24-ம் தேதி தலைமையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் உலக நாடுகளை சேர்ந்த சிலரும் பங்கேற்கின்றனர்.
நியார்க்கில் செப்டம்பர் 27-ல் நடைபெறும் ஐ.நா. சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலகத்தலைவர்கள் மத்தியில் பேசுகிறார். ஐ.நா. சபையில் உரையாற்றி விட்டு அன்றிரவு அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.
இந்நிலையில், தனது அமெரிக்க பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கும் பில்கேட்சின் அமைப்புக்கு நன்றி. பல நாட்டு தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும்
அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள இந்தியர்களையும், அதிபர் டிரம்பையும் சந்திக்க உள்ளேன், இதன் மூலம் இரு நாட்டு உறவுகள் மேம்படும் என பதிவிட்டுள்ளார்.