Main Menu

அமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்

அத்தியாவசிய தேவைகளற்ற பாதுகாப்பான பயணங்களுக்கான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பட்டியலில் இருந்து அமெரிக்காவை புறம்தள்ளியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் ஏனைய நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சுகாதார நலன் கருதி குறித்த தடையினை ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுக்கு வருவதுடன், நாடுகளுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மேலதிகமாகவும் பயணிகள் போக்குவரத்துக்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தயார் செய்யப்பட்டுள்ள நாடுகளுக்கான பட்டியலில் அமெரிக்கா இடம்பிடிக்கவில்லை.

அல்ஜீரியா, அவுஸ்ரேலியா, கனடா, ஜோர்ஜியா, ஜப்பான், மொன்டெநீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதனைவிட சீனாவுக்கும் பகுதியளவிலான அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளை சீனா அனுமதித்தால் மட்டுமே குறித்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இணைத்து, ரஸ்யா, பிரேஸில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் குறித்த போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக குறித்த நாடுகளால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறு தடை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares