அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு 16 பேர் காயம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட சான்டா கிலாடிட்டா என்ற பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழக்கம் போல இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அங்குவந்த மர்ம நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவனும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 16 வயதுடைய சிறுமியும், 14 வயதுடைய சிறுவனும் உயிரிழந்துள்ளர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அருகில் உள்ள பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.