அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்!
ஃபுளோரிடாவில் உள்ள ஓர் அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர் ஒருவர்.
ஏழரை மாதக் குழந்தையை ஒருவகையில் புதிய பொருள் என்று கூறி, பிள்ளைக்கு எவ்வளவு பணம் தர முடியும் எனக் கேட்டார் பிள்ளையின் தந்தை.
அடகுக் கடை உரிமையாளரோ காவல்துறையிடம் உடனடியாகப் புகார் செய்தார். அதிகாரிகள் வந்ததும், வேடிக்கைக்காகவே அவ்வாறு செய்ததாகக் கூறினார் தந்தை.
கடை உரிமையாளரோ ஆடவரின் நடத்தையைப் பார்க்கும்போது அவ்வாறு தோன்றவில்லை என்றார். பிள்ளையின் நலம் கருதிக் காவல்துறையை அழைத்ததாக அவர் கூறினார்.
பிள்ளையின் தந்தை சமூக ஊடகத்தில் சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்ய விரும்பியதாய்க் கூறினார். அதற்காகவே பிள்ளையை அடகு வைக்கப் பார்த்ததாகவும் அவர் சொன்னார்.
புகாரை விசாரித்த அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாய் உறுதிசெய்துள்ளனர். தந்தை மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.