Main Menu

F.21 விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் – அமெரிக்கா

அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம், புதியதாக வெளியாகியுள்ள எப் 21 ரக விமானத்தில் 114 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டால், நாங்கள் வேறு யாருக்கும் இவ்வகை விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை டெண்டர் கோரியுள்ளது. 18 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீப காலங்களில் மேற்கொள்ளப்படும் மிகவும் அதிகமான தொகையில் மேற்கொள்ளப்படுவதாகும்.

இந்த ஒப்பந்தத்தை வாங்க அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகிறது.
போட்டியில் முன்வரிசையில் இருப்பது லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப் 21 விமானங்கள், போயிங் நிறுவனத்தின்  F/A-18 விமானங்கள், பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர்  டைப்யூன், ரஷியாவின் மிக் 35 மற்றும் சுவீடனின் சாப் 35 கிரிப்பன் விமானங்கள் உள்ளது.

இந்நிலையில் புதிய அறிவிப்புடன் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் முன்வந்துள்ளது. அதாவது இந்தியாவிற்கு விற்பனை செய்தால் அந்த தொழில்நுட்பத்தையும், விமானத்தையும் வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது.

லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் பேசுகையில், இந்தியாவில் 60 விமான நிலையங்களில் செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்களில் உயர்தர எந்திரம், மின்னணு போர்திறன் கட்டமைப்பு, ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் ஆகியவை அடங்கும். இந்தியா எங்களிடம் வாங்க ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகில் யாருக்கும் வழங்கமாட்டோம். 

இது இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் தனித்துவமான தேவையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது எனக் கூறியுள்ளார். மேலும் இந்தியா வாங்கினால் விலையும் குறைவாக கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...