Main Menu

பிரான்ஸிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: முற்றிலும் தவறான செய்தி – பாகிஸ்தான் தூதரகம்

வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வித் துறையின் பின்னடைவு மற்றும் அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளுக்கு எதிராகப் பொதுமக்களும் தொழிலாளர் சங்கங்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

பாடசாலை ஆசிரியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் அரசத் துறை ஊழியர்கள் இணைந்து நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் பிரான்ஸில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை பிரெஞ்சு அரசாங்கம் ரத்து செய்துள்ளதாகவும், பலரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் போலியானவை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பெயரில் (@PakConsulateFr) இயங்கிய ஒரு போலியான X தளப்பக்கத்தில், “பிரான்ஸ் அரசு 183 பாகிஸ்தானியர்களின் சுற்றுலா விசாக்களை ரத்து செய்துள்ளதாகவும், 118 பாகிஸ்தானியர்களை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாகவும்” செய்தி பகிரப்பட்டது.

இந்தச் செய்தி வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பிரான்ஸில் உள்ள அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் தூதரகம் (@PakinFrance) உடனடி மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்றும், குறிப்பிட்ட X தளப் பக்கம் ஒரு போலி கணக்கு என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரெஞ்சு அரசாங்கமோ அல்லது பிரெஞ்சு குடிவரவுத் துறையோ (French Immigration Department) பாகிஸ்தானியர்களின் விசாக்களை மொத்தமாக இரத்து செய்வது குறித்தோ அல்லது அவர்களைத் திருப்பி அனுப்புவது குறித்தோ எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, பிரான்ஸ் அரசு பாகிஸ்தானியர்களின் விசாக்களை இரத்து செய்ததாக வெளியாகும் தகவல்கள் வதந்திகளே தவிர, அதில் உண்மை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் குறித்த mofa.gov.pk இணையத்தளத்தின் உள்ளே சென்று பார்வையிட முடியும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தப் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் காரணமாக, வெளிநாட்டுப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்காகப் பிரான்ஸ் செல்ல எதிர்பார்ப்போர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டங்களில் பங்கேற்பதாலும், நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளதாலும் விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது.

வழக்கமான கால எல்லையை விடவும் விசா முடிவுகள் வரப் பல வாரங்கள் தாமதமாகின்றன.

கல்வி ஆண்டிற்காகப் பிரான்ஸ் செல்லக் காத்திருக்கும் சர்வதேச மாணவர்கள் மற்றும் குறுகிய கால சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்கள் உரிய நேரத்தில் விசா கிடைக்காமல் தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் தொடருந்து வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாரிஸ் சார்ல்ஸ் டி கோல்போன்ற சர்வதேச வானூர்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கத்தால், விசா அனுமதி பெற்ற பயணிகள் கூட பிரான்ஸுக்குள் பயணிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை பிரான்ஸ் நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற மற்றும் வதிவிட உரிமை பெற்ற இலங்கையர்கள் உட்பட ஏனைய நாட்டவர்களின் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.