Main Menu

பிரான்ஸ்: தொடரும் போராட்டங்கள் : நவம்பர் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்

அக்டோபர் 24ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும் வெற்றியடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொழிற்சங்கங்களும் சமூக இயக்கங்களும் அறிவித்துள்ளன. இதன்படி, அக்டோபர் 30, 31ஆம் திகதிகள் மற்றும் நவம்பர் 5ஆம் திகதி உள்ளிட்ட பல்வேறு நாட்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. CGT தொழிற்சங்கத்தின் Haute-Garonne பிராந்தியச் செயலாளர் Cédric Caubère, மக்களின் கோபம் நீடிக்கும் வரை போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக நவம்பர் 5ஆம் திகதியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தங்களையும் நேரடி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அக்டோபர் 30ஆம் திகதி இரவு நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு முன்பாக மஞ்சள் அங்கி இயக்கத்தினர் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவுள்ளனர். ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, ஊரடங்கு மற்றும் நகர மையங்களை மூடும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அக்டோபர் 31ஆம் திகதியும் நாடாளுமன்றம் மற்றும் நகரசபைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. நவம்பர் 2ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், மாணவர்களின் போராட்டங்களும் மீண்டும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 5ஆம் திகதி பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 19ஆம் திகதி ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். டிசம்பர் 4ஆம் திகதி தீயணைப்புப் படையினரும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதன்போது மாகாண நிர்வாக அலுவலகங்களுக்கு முன்பாக தலைக்கவசங்களை ஒப்படைக்கும் அடையாளப் போராட்டத்தையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.