“கருத்தியல் போரிலும் நம்பகத்தன்மைக்கான போரிலும் வெற்றி பெற்றுவிட்டோம்” – Marine Le Pen
ஜனாதிபதித் தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிடத் தயாராகும் Marine Le Pen, ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 25ஆம் திகதி Orléans நகரில் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். Rassemblement national (RN) கட்சியின் மாநாட்டின் இரண்டாவது நாளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் Jordan Bardella மற்றும் Eric Ciotti ஆகியோரும் பங்கேற்றனர். Arena மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 8,500 ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு Orléans நகரில் சுமார் 3,000 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 100 எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில், RN கட்சிக்கு எதிராக சனிக்கிழமை Loire ஆற்றின் மறுபுறத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13,000 முதல் 26,000 பேர் வரை கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சோசலிசக் கட்சித் தலைவர் Olivier Faure, Marine Le Pen தலைமையிலான கட்சி நீண்டகாலமாக இனவாதம் மற்றும் வெளிநாட்டவர் எதிர்ப்பு மனப்பான்மையை வளர்த்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். Trappes நகரில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த Marine Le Pen, சம்பவத்துடன் தமது கட்சியைத் தொடர்புபடுத்துவது நியாயமற்றது எனத் தெரிவித்தார். கருத்துக் கணிப்புகளில் RN கட்சி 35 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் வெற்றி நெருங்கிவிட்டதாக கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். “கருத்தியல் போரிலும் நம்பகத்தன்மைக்கான போரிலும் வெற்றி பெற்றுவிட்டோம்; இனி வாக்குப் பெட்டிகளில் வெற்றி பெற வேண்டும்” எனக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் Jean-Lin Lacapelle தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றிய Marine Le Pen, பிரான்ஸின் மறுமலர்ச்சியையும் மக்களின் நலனையும் தனது அரசியல் நோக்கமாகக் குறிப்பிட்டார். குடியேற்றக் கொள்கை மற்றும் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது வழக்கமான கடுமையான நிலைப்பாடுகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதேவேளை, வலதுசாரி வாக்குகளை ஒன்றிணைக்கும் நோக்கில் Eric Ciotti, முன்னாள் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் RN கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கான வங்கிக் கடனைப் பெறுவதில் Marine Le Pen இன்னும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடாளுமன்ற நிதி முறைகேடு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தேர்தலின் முதல் சுற்றுக்கு முன்னதாகத் தீர்ப்பளிக்கவுள்ளது. தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தால், ஒரு வருட சிறைத்தண்டனையை மின்னணு கண்காணிப்பு வளையத்துடன் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இருப்பினும், RN கட்சியினர் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு தமது பிரசார நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
