மக்ரோன் பதவி விலக வேண்டும் – ஜோன்-லுக் மெலன்சோன் வலியுறுத்தல்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும், அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டித்தும் அக்டோபர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிஸில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் முன்னணியில் பங்கேற்ற இடதுசாரித் தலைவர் ஜோன்-லுக் மெலன்சோன், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “இப்போது மக்ரோன் விட்டுக்கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், அவருக்கு வெளியேறுவதற்கான வழி மட்டுமே எஞ்சியிருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தப் போராட்டங்கள் ஒவ்வொரு வாரமும் மீண்டும் மீண்டும் நடைபெறும் என்பதை அவர் புரிந்துகொள்வார்” என்றும் மெலன்சோன் குறிப்பிட்டுள்ளார். பரிஸின் Porte d’Italie பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அவர், போராட்டப் பாதையில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பரிஸில் நடைபெறவிருந்த பேரணியின் பாதை தொடர்பாக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் காவல்துறை தலைமையகத்துக்கும் இடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும், வெள்ளிக்கிழமை மாலை காவல்துறை தலைமையகம் பேரணிப் பாதையை மாற்றியமைத்தது. இதற்கு எதிராகப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் நிர்வாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்டோபர் 24ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு Porte d’Italie பகுதியில் இருந்து பேரணி ஆரம்பமாகி, Porte de Vincennes பகுதியை நோக்கிச் சென்றது. கடந்த வாரம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக நடைபெற்ற முதல் கட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, மஞ்சள் மேலங்கி இயக்கத்தினர், தொழிற்சங்கங்கள், உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மீண்டும் வீதிகளில் இறங்கியுள்ளனர். இதனிடையே, அரசாங்கம் “ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என மெலன்சோன் வலியுறுத்தியதுடன், போராட்டக்காரர்களின் ஒழுங்கான மற்றும் கட்டுப்பாடான எதிர்வினையைப் பாராட்டியுள்ளார்.
இதேவேளை, அக்டோபர் 24ஆம் திகதி நண்பகல் 1 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையினரின் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நண்பகல் வரை நாடு முழுவதும் சுமார் 35,000 போராட்டக்காரர்கள் பங்கேற்றுள்ளதாகவும், கடந்த சனிக்கிழமை இதே நேரத்தில் 60,000 பேர் பங்கேற்றிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பரிஸில் போராட்டப் பேரணி நிறைவடையும் இடமான Vincennes பகுதிக்கு அருகில் உரையாற்றிய Laurent Nuñez, போராட்டங்களைச் சீர்குலைப்பதற்கான அழைப்புகள் அரசியல் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் ஆதரவு தெரிவித்த அவர், “நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுகிறீர்கள் என்பதையும், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் விகிதாசாரத்திற்கு உட்பட்டவை என்பதையும் நான் அறிவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
