Main Menu

பிரான்ஸில் அக்டோபர் 24 நாடளாவிய போராட்டம்: கட்டுப்படுத்த 70,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்

இன்று அக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நாடளாவிய போராட்டங்களை முன்னிட்டு, நாடு முழுவதும் 70,000 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez அறிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில், பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாளைய போராட்டங்களுக்கான பாதுகாப்புத் திட்டம் குறித்து அவர் விளக்கமளித்தார்.

தேசிய ஜொந்தாமினர் தலைமை இயக்குநருடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற Laurent Nuñez, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மிகப் பாரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். தீவிர இடதுசாரி அமைப்புகளிடமிருந்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுமாறு பல அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், கலவரக்காரர்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். RAID, GIGN மற்றும் BRI போன்ற விசேட பாதுகாப்புப் பிரிவுகளும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும், ஆளில்லா விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் கவச வாகனங்களும் பாதுகாப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அக்டோபர் 17ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Laurent Nuñez தெரிவித்தார். நாளைய போராட்டங்களின்போது கைது செய்யப்படுபவர்களை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நீதித்துறை காவல் பிரிவுகளும் விசேடமாக ஈடுபடுத்தப்படவுள்ளன. பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவர்களில் பலர் விடுமுறையில் இருந்தபோதிலும் கடமையில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிட்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக அதிகாரிகள் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது வன்முறையாக உருமாறி வணிக நிறுவனங்கள் கொள்ளையிடப்பட்டு பாரிய நிதியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டங்களை நினைவுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் மஞ்சள் அங்கி இயக்கமும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.