போராட்டத்தால் முடங்கும் பரிஸ் நகரம் – அருங் காட்சியகங்கள், வர்த்தக நிலையங்கள் மூடல்
அக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு, நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள், கொள்ளைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது ஏற்படக்கூடிய வன்முறைகளைத் தவிர்க்கும் வகையில், கலாசார அமைச்சு பல முக்கிய அருங்காட்சியகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. Louvre, Orsay, Grand Palais, Picasso அருங்காட்சியகம் மற்றும் Orangerie ஆகியவை சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் இடம்பெறக்கூடிய போராட்டங்களை கருத்தில் கொண்டு, பார்வையாளர்கள், கண்காட்சியாளர்கள், பணியாளர்கள் மற்றும் கலைப்படைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, பரிஸ் நகர மையத்தில் சிறுவர்களுக்காக நடத்தப்படவிருந்த Mon Premier Festival திரைப்பட விழாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகத்தின் அதிகாரியான Patrice Faure, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், திறந்திருக்கும் நேரங்களையும் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தில், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்களை பணியில் அமர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது, அனைத்து வகையான வர்த்தக நிலையங்களையும் சேர்த்து குறைந்தது 451 கடைகள் சேதப்படுத்தப்பட்டதாக பரிஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 228 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன், 223 கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, பரிஸ் நகருக்கு வெளியே நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெறவிருந்த Ligue 1 கால்பந்துப் போட்டியான Toulouse – Troyes மோதல், Haute-Garonne மாகாண காவல்துறை தலைமையகத்தின் கோரிக்கையை அடுத்து ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, Ligue 2 தொடரில் Montpellier மற்றும் Red Star அணிகளுக்கு இடையிலான போட்டியும் சனிக்கிழமை பிற்பகலுக்குப் பதிலாக திங்கட்கிழமை இரவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
