Main Menu

சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்-களுக்கு கடும் நிபந்தனை – ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் சனிக்கிழமை, ஒக்டோபர் 24ஆம் திகதி, தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை, ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படாத ஏனைய ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்படும் என்றும், இதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆளுநர்கள் பிறப்பிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு உரிய அங்கீகாரம் இல்லாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் பேரணிகள் தடை செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய நேரம் இது. தற்போதைய சூழ்நிலையில் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பதே பொதுவான பரிந்துரையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கங்கள் முன்மொழியும் ஆர்ப்பாட்டப் பாதைகள் அதிகாரிகளுக்குப் பொருத்தமற்றதாக இருந்தால், மாற்றுப் பாதைகளை மாவட்ட நிர்வாகங்கள் பரிந்துரைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நகர மையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது கட்டடங்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே Lyon மற்றும் Orléans உள்ளிட்ட நகரங்களில் இந்த வார இறுதியில் சில ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக மக்ரோன் அறிவித்துள்ளார். மறுபுறம், பிரதமர் Sébastien Lecornu எதிர்வரும் திங்கட்கிழமை மாணவர் அமைப்புகள், உயர்நிலைப் பாடசாலை மாணவர் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.