பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட சில நகரங்களில் ஊரடங்கு
நாடு முழுவதும் வார இறுதியில் கலவரங்களும் கொள்ளைச் சம்பவங்களும் அரங்கேறியதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிகாரிகள் பாரிஸின் மத்தியப் பகுதிகள் மற்றும் பிற நகரங்களில் திங்களன்று (19) இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளை அமுல்படுத்தியுள்ளனர்.
வார இறுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடிய ‘பிளேஸ் டி லா ரிபப்ளிக்’ (Place de la République) பகுதி மற்றும் ‘லெ ஹால்ஸ்’ (Les Halles) வணிகப் பகுதியில், உள்ளூர் நேரப்படி இரவு 11:00 மணி (GMT நேரப்படி இரவு 9:00 மணி) முதல் காலை 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று பாரிஸ் காவல்துறையினர் கூறினர்.
நகர மையத்தின் ஏனைய பகுதிகளிலும் அனுமதியற்ற ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்குப் பகுதியில் உள்ள மார்சேய், போர்டோ, நைஸ் மற்றும் லியோன் ஆகிய நகரங்களிலும், வடக்கு பகுதியில் உள்ள லீல் மற்றும் பிற நகரங்களிலும், இளைஞர்களின் நடமாட்டத்தையும் மக்கள் ஒன்றுகூடுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.
கடந்த மாதம் மாணவர்கள் பாடசாலை மற்றும் கல்லூரிகளில் சிறந்த சூழலை வலியுறுத்திப் போராட்டங்களைத் தொடங்கினர்.
ஆனால், காலப்போக்கில் இந்தப் போராட்டங்கள் விரிவடைந்து, பல்வேறு கூடுதல் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக மாறின.
இந்த வார இறுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், தொழிற்சங்கங்களும் பல்வேறு போராட்டக் குழுக்களும் இணைந்துகொண்டதால், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
2,500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர் ஒருவரின் கை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்திய கையெறி குண்டு ஒன்றினால் துண்டிக்கப்பட்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கின்றன.
அந்த தகவலுக்கு அமைய சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து, உள்ளூர் மேயர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இருப்பினும், எந்தெந்த நகரங்களில் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.
நாட்டில் அவசரநிலையை அமுல்படுத்துவதற்கான வாய்ப்பைத் தள்ளுபடி செய்யாத பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, பாதிக்கப்பட்ட பகுதிகள் சேதங்களிலிருந்து மீண்டு வர அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என்றும், வன்முறைக்குக் காரணமானவர்களிடமிருந்து இந்த நிதி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் வேலை செய்ய முடியாதவர்களுக்காக, பகுதிநேர வேலையின்மை நிதியையும் அவர் அறிவித்தார்.
இதற்கிடையில் சாத்தியமான முக்கியத் தலைவர்களை அடையாளம் காணும் முயற்சியில் 200 புலனாய்வாளர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நியூனெஸ் குறிப்பிட்டார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்ய முயன்றார், ஆனால் “சட்ட அமுலாக்கத்தின் மீதான தொடர்ச்சியான கட்டளையின் தேவை காரணமாக” பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மறுத்துவிட்டார்.
வார இறுதியில் நடந்த வன்முறையால் 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பிற வணிகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பிரான்சின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் (CCI) தலைவர் கூறுகிறார்.
எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுச் சேவைகளின் தரம் குறைதல் ஆகியவற்றிற்கு எதிராக, வார இறுதியில் சுமார் 5,50,000 பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸ், மார்சேய் மற்றும் பிற நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில், கறுப்பு உடை அணிந்து முகமூடி அல்லது தலைக்கவசம் அணிந்திருந்த கலவரக்காரர்கள் குழுக்கள், கார்களுக்கும் கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர்.
மேலும் வணிக நிறுவனங்களைக் கொள்ளையடித்தனர்.
மத்திய நகரமான லிமோஜில், சனிக்கிழமையன்று கலவரக்காரர்களால் மூட்டப்பட்ட தீயில், 19 ஆம் நூற்றாண்டின் கலைநயம் மிக்க நகர மண்டபம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீப்பிழம்புகள் பரவியதால், அதன் கடிகார கோபுரமும் கூரையும் இடிந்து விழுந்தன.
அண்மைய ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்குமாறு பிரான்சிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
