நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.
இதன்படி, 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினர் மற்றும் 127 நேபாள நாட்டினர் உட்பட மொத்தம் 644 பேர் தற்போது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டினரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இவர்களில் 178 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
அண்மைய பட்டியலில் 65 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 51 மலேசியர்கள் மற்றும் 35 அவுஸ்திரேலியர்களும் அடங்குவர்.
மேலும் 33 பிரிட்டிஷ் குடிமக்கள் மற்றும் 25 கனடியர்களும் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமல் போனவர்களில் ஒன்பது சிங்கப்பூரர்கள், தலா எட்டு ஜெர்மானியர்கள் மற்றும் ரஷ்யர்கள், தலா ஆறு லாட்வியர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்கர்கள், தலா ஐந்து ஜப்பானியர்கள் மற்றும் நியூசிலாந்தினர், நான்கு பிரெஞ்சு குடிமக்கள், மற்றும் தலா மூன்று பெல்ஜியர்கள் மற்றும் ஸ்பானியர்கள் ஆகியோரும் அடங்குவர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கையின்படி, இத்தாலி, அயர்லாந்து, கஜகஸ்தான், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவர் காணாமல் போயுள்ளனர்.
அதேவேளையில் பெலாரஸ், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், செர்பியா, ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகளும் மீட்புக் குழுக்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
