அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்
அரசியல் துறவறம் மேற்கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் அதிகாரப்போட்டி நடந்துவந்த நிலையில் கட்சியே இரு அணிகளாக பிரிந்திருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரத்தில் ராமதாஸ் – சரஸ்வதியின் 61-வது திருமண நாளில் குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசி பெற்றார். இதன்மூலம் கோஷ்டி அரசியல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்வி நிலையத்தில் தனது 88-வது பிறந்த நாளை ராமதாஸ் நேற்று கொண்டாடினார். ராமதாஸும், அன்புமணியும் ஓராண்டுக்கு பிறகு ஓரே மேடையில் அமர்ந்திருந்தனர். மரக்கன்றுகளை நட்டு வைத்து ராமதாஸ் பேசியதாவது: உங்களுக்கு நல்ல செய்தியை சொல்கிறேன். நான் அரசியல் பேச மாட்டேன்.
அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். என்னை சந்திக்க வருபவர்களை பார்ப்பேன், நலம் விசாரிப்பேன், அவ்வளவுதான். அரசியலில் தலையிடமாட்டேன். அரசியலை அன்புமணி பார்த்துக்கொள்வார். அவரது மனைவியும், நாங்களும் துணையாக இருப்போம். என்னை பார்க்க வருபவர்கள் என்னை பார்த்துவிட்டு, அய்யா நலமா என விசாரித்துச் செல்லலாம்.
அரசியல் பேசுவதற்கு ஏதுமில்லை. இன்று (நேற்று) முதல் அரசியல் துறவறம் மேற்கொண்டிருக்கிறேன். இந்த கல்விக் கோயில் மேலும் சிறப்பாக செயல்பட பாடுபட வேண்டும். இதுவே எனக்கு நீங்கள் செய்கின்ற காணிக்கையாக கருதுகிறேன். உங்களுடன் நீண்ட நேரம் பேச ஆசை இருந்தாலும், தலை சுற்றல் வியாதி, இப்போதும் எட்டிபார்க்கிறது. ஆனாலும் உங்களை பார்க்க வேண்டும் என ஆவலுடன் வந்துள்ளேன். என்னை வாழ்த்தும் உங்களது நல்ல உள்ளம், எனக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவு எப்போதும் மாறாது. இவ்வாறு பேசினார்.
அரசியல் துறவறம் பூணுகிறேன் என ராமதாஸ் கூறியபோது, எவ்விதமான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மேடையில் அன்புமணி அமைதியாக காணப்பட்டார்.
அவரது உடல்மொழி மூலமாக ராமதாஸின் அரசியல் ஓய்வு அறிவிப்பு என்பது குடும்பத்தினருடன் ஏற்கெனவே கலந்து பேசி திட்டமிட்டு, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது. 47 ஆண்டுகள் பயணம், 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வந்த பாதங்கள் என அடிக்கடி கூறிய ராமதாஸின் அரசியல் அத்தியாயம் என்பது நிறைவு பெற்றதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
