திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேல்முருகன் வலியுறுத்தல்
ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தங்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக 5-வது நாளாக 5 பேர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதும், அவர்களில் 3 பெண்களின் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன.
இனப்படுகொலையில் தப்பி, பாதுகாப்பு தேடித் தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்களை, ஆண்டுக்கணக்கில் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை போன்ற சூழலில் அடைத்து வைப்பது மனிதாபிமானத்துக்கும்,மனித உரிமைகளுக்கும் எதிரானச் செயலாகும்.
அவர்கள் விரும்பினால் பாதுகாப்பான 3-ம் நாடுகளுக்குச் செல்லத் தேவையான சட்ட, நிர்வாக மற்றும் தூதரக நடவடிக்கைகளை தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே வாழ விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியச் சட்டங்களின்படி குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ நிரந்தர வாழ்வுரிமை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவும், அதற்காகத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 5 பேருடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து முடித்து, திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
