சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு
வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கைதி ஒருவரை சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலையிலிருந்து விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவுக்கு சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை வாசித்துக் கையளிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக்க அத்தனாயக்க முன்னிலையில், அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு எதிராக தனித்தனியாக 5 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன.
சம்பவம் நடந்த காலகட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த 28 வழக்குகளில் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஒருவருக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் காட்டும் வகையில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பின்னர் அந்தப் போலி ஆவணங்களை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட கைதியை சட்டவிரோதமாக சிறையிலிருந்து விடுவித்தமையே இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி முதல் மே மாதம் 14ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், முதலாவது பிரதிவாதியான சிறைச்சாலை அத்தியட்சகர் தனது பதவியைப் பயன்படுத்தி இந்த மோசடியைச் செய்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் பொது மன்னிப்பைப் பெறுவதற்கு, D/52796 என்ற சிறைக்கைதி இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது பிரதிவாதியான டப்ளியூ.எம். அத்துல திலகரத்ன என்ற கைதிக்கு தகுதி இல்லாத நிலையிலும், அவரை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து காப்பாற்றும் நோக்கோடும் அல்லது தண்டனையைக் குறைக்கும் நோக்கோடும் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதற்கு அமைய, அவர் தண்டனைச் சட்டக்கோவையின் 113(ஆ) மற்றும் 102 ஆகிய பிரிவுகளுடன் இணைத்து வாசிக்க வேண்டிய 214ஆம் பிரிவின் கீழ் தண்டிக்க கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளார் என சட்டமா அதிபர் 5 குற்றப்பத்திரிகைகளின் ஊடாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, அந்த 5 குற்றச்சாட்டுகளுக்கும் தான் குற்றமற்றவர் என முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, முன்னாள் அத்தியட்சகரை 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல மேல் நீதிமன்றம் அனுமதித்தது. பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்த நீதிமன்றம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக சிறையிலிருந்து தப்பிச் சென்ற டப்ளியூ.எம். அத்துல திலகரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த மோசடியைச் செய்ய சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தானும் குற்றமற்றவர் என இரண்டாவது பிரதிவாதி நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அவரையும் ரொக்க மற்றும் சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
எனினும், பிறிதொரு நிதி மோசடி வழக்குத் தொடர்பாக ஏற்கனவே 5 வருடக் கடுழிய சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் இந்த இரண்டாவது பிரதிவாதி, குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொள்வதற்காக அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளினால் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
