134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் உத்தரவு
‘சரிகம’ நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இளையராஜா தரப்பால் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பாக நீண்டகாலமாக சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், ‘சரிகம’ இசை நிறுவனத்துடனான பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் ஆரம்பகாலத் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கற்களாக அமைந்த 134 படங்களின் பாடல்கள் இந்த வழக்கின் கீழ் வருகின்றன.
இந்த 134 படங்களின் பாடல்களுக்கான உரிமை ‘சரிகம’ நிறுவனத்திற்கே சாதகமாக இருப்பதாக ஏற்கனவே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அந்தப் பாடல்களுக்குத் தனக்கே உரிமை உண்டு எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இளையராஜாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
அத்துடன், அந்த குறிப்பிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்து, சரிகம நிறுவனத்திற்கு சாதகமான முந்தைய உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
