“திமுக கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இல்லை” – திருமாவளவன்
“தேர்தலுக்கு முன் என்னை வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் முயற்சித்தனர். அதற்கு நான் இணங்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னைப் போன்றவர்களுக்கு இல்லை” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ஜூலை 5-ம் தேதி விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சொக்கலிங்கத்துக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்க உள்ளோம். எனது பிறந்தநாளான ஆகஸ்ட் 17 தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அதே நாளில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடத்த உள்ளோம். மாநாடு எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும்.
கடந்த ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுவதாக நம்புகிறேன்; வரவேற்கிறேன்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர். அந்தப் பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல. ஆகவே, அந்த பொறுப்பை முதல்வர் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு வழங்கி உள்ளார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன் என்னை வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் முயற்சித்தனர். அதற்கு நான் இணங்கவில்லை. திமுக கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்போடு இயங்கினோம். தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னைப் போன்றவர்களுக்கு இல்லை. அந்த வலிமை எனக்கு இல்லை. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறுவது குறித்து திமுக தலைமை தான் பதில் சொல்ல வேண்டும். மதிமுகவின் 2 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதல்வர் விஜய் தெரிவித்ததாக வைகோ கூறியது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
