யாழ். வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 பேர் கைது ; படகு, வலைகள் கைப்பற்றப்பட்டன
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து படகு மற்றும் வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் வெள்ளிக்கிழமை (26) கடற்படையினர் கடலிலும் கடற்கரைப் பகுதிகளிலும் சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்போது கடற்பரப்பில் ஒளிபாய்ச்சி மீன் பிடித்தமை, சட்டவிரோத வலைகளை பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ஒரு படகில் கடற்றொழிலில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றினர்.
அதேவேளை கரையில் நடாத்திய தேடுதல் நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த வலைகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 8 கடற்றொழிலாளர்களையும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
