Main Menu

உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தொற்றா நோய்களைக் கட்டுப் படுத்தலாம்: சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்

தற்காலத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களுக்கான முக்கிய காரணியாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காணப்படுவதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும், சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதே பல நோய்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. புதிய வகை உணவுப் பழக்கங்கள் மற்றும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதால் நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

மூன்று வேளை உணவை உட்கொள்ளும் போது, முறையான உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அன்றாட உணவில் குறைந்தது இரண்டு வகையான மரக்கறிகள், இரண்டு பழங்கள் மற்றும் ஒரு கீரை வகையை உள்ளடக்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஐந்து விடயங்களையும் சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்துவது அவசியமாகும்.

அதிகப்படியான கொழுப்பு மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். தற்காலத்தில் இனிப்பு மற்றும் உப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 35-40 வயதிற்குள்ளேயே தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மிகாத உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நோய்களிலிருந்து விடுபட நீர் அருந்துவது மிக முக்கியமானதாகும். சிறுவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு லீற்றர் வரையிலும், பெரியவர்கள் இரண்டு முதல் மூன்று லீற்றர் வரையிலும் நீர் அருந்துதல் வேண்டும்.

சரியான உணவுப் பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுவதன் ஊடாக, உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்த முடியும் என மருத்துவர் அஹ்மட் ஷியாம் மேலும் வலியுறுத்தினார்.