கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை எக்காரணம் கொண்டும் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு வந்தது.
இன்றைய நீதிமன்ற அமர்வில் , மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரைக் கைது செய்வதற்குப் பின்னணியில் உள்ள சட்ட முரணான தன்மைகள் குறித்துத் தொடர்ந்து தனது பலத்த வாதங்களை முன்வைத்தார்.
இம் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தரப்பு அதிகாரிகள் சார்பாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விசேட ரிட் மனுவில்,
பொலிஸ் மா அதிபர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன,
சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், அரசியல் பழிவாங்கல்கள் அல்லது முறையற்ற சட்ட நடவடிக்கைகளின் கீழ் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தடையுத்தரவு கோரும் மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கின் மேலதிக வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.
