கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்று (14) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார்.
நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச. பவானந்தராசா மற்றும் ரஜீவன் செயசந்திரமூர்த்தி, மாவட்ட செயலர் ம.பிரதீபன், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையம் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் இராசபாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை உள்ளடக்கி இயங்கி வந்தது
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கால பகுதியில் 07 காணி மற்றும் வீட்டு உரிமையாளர்கள் யாழ். மாவட்ட நீதிமன்றில் தமது காணிகள் வீடுகளை விட்டு பொலிஸார் வெளியற வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைகள் 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி பொலிஸார் தனியார் காணிகள் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விட்டு, வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனை அடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி பொலிஸ் நிலையம் இயங்கிய வீடுகளை தவிர , பொலிசாரின் தங்குமிடம் , மைதானமாக இருந்த காணிகள் வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேறினர்.
இந்நிலையில் பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த பகுதியில் இருந்து இராச பாதை வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் , புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அதனை அடுத்து, இதுவரையில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்த அனைத்து காணிகள் மற்றும் வீடுகளை விட்டு பொலிஸார் முற்றாக வெளியேறியுள்ளனர்.
