Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதவியளித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி சட்டம் அமுல்படுத்த வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் சஹ்ரான் குழுவினருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறித்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் மயப்படுத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்காலத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான மனிதாபிமான பிரச்சினையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போத அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்துள்ள புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் வழங்கிய வாக்குமூலங்களை பார்க்கும்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சதித் திட்டம் என்ன என்பது நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தான் குற்றமற்றவர் என்று நம்பினால் அவர் சட்டத்தை அஞ்சி நடுங்க தேவையில்லை. அதனை விடுத்து அவர் சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. அவர் செய்ய வேண்டியது நீதிமன்றத்துக்கு சென்று சிறந்த சட்டத்தரணிகள் ஊடாக தான் நிரபராதி என்று நிரூபிப்பது மட்டுமேயாகும்.

சுரேஷ் சலே புலானாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலகட்டத்தில் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரை கைது செய்து அவர்களை குறித்த தாக்குதலின் சூத்திரதாரிகள் எனக் கூறினார். ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் யாரும் சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மாறாக நீதிமன்றத்தின் முன்னிலையில் சட்ட ரீதியாகப் போராடித் தங்களின் நிரபராதி தன்மையை நிரூபித்து வெளியில் வந்தனர். அதே வழியை சுரேஷ் சலேவும் பின்பற்றினால் சட்ட ரீதியாக வெளியில் வரலாம்.

குறித்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் மயப்படுத்துவதை நான் ஏற்றுக்கொளஙளவில்லை. இது வெறும் அரசியல் இலாபம் அடைவதற்கோ அல்லது ஆட்சியைப் பிடிப்பதற்கோ பயன்படும் ஒரு விடயம் அல்ல.

இது நாட்டின் தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான மனிதாபிமான பிரச்சினையாகும். சஹ்ரான் குழுவுக்கு உதவிய குற்றவாளிகள் தண்டிக்கபடாமல் சுதந்திரமாக நாடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தை தாண்டி தேசிய நலன் சார்ந்து பார்க்க வேண்டும் என்றார்.