“பௌத்த பிக்குகளைக் கொன்ற ஜே.வி.பி-க்கு பௌத்தத்தை சீர்திருத்த என்ன தகுதி இருக்கிறது?” – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்
பௌத்த தர்மத்தை சிதைப்பவர்களுக்கு எதிராகப் பண்டைய மன்னர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தைய வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1987-89 காலப்பகுதியில் கொடிகாவத்தே சத்தாதிஸ்ஸ தேரர், வெல்தொட்ட பஞ்ஞாதஸ்ஸி தேரர் உள்ளிட்ட பல முன்னணி பௌத்த மதகுருமார்களை ஜே.வி.பி படுகொலை செய்தது.
பௌத்த மதத்தில் மகா பாவமாகக் கருதப்படும் பிக்குகள் படுகொலை மற்றும் விகாரைகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க சொத்துக்களைக் கொள்ளையடித்த சம்பவங்களுக்கு ஜே.வி.பி இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை.
இத்தகைய இரத்தக்கறை படிந்த வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சி, பௌத்த பிக்குகளை நல்வழிப்படுத்துவது குறித்துப் பேசுவதையும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதையும் எந்த வகையில் சகித்துக்கொள்ள முடியும்.
அரசாங்கத்தின் தனிச்சார்பான பௌத்த விரோதச் செயல்பாடுகள்அரசாங்கம் பௌத்த மத மரபுகளைத் தொடர்ந்து மீறி வருகின்றது.
அண்மைய சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான சுப நேரங்களை இந்த அரசு குழப்பியது. அத்துடன், உலகம் முழுவதும் மே 1 அன்று வெசாக் தினத்தைக் கொண்டாடிய போது, தமது அரசியல் பேரணிக்காக வெசாக் தினத்தை அரசாங்கம் பிற்போட்டது.
விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைபை நாடாளுமன்றத்தின் பௌத்த உறுப்பினர்களுடனோ அல்லது மகாநாயக்க தேரர்களுடனோ கலந்தாலோசிக்காமல், பௌத்தத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த அமைச்சரவை தன்னிச்சையாக தயாரித்துள்ளது.
பௌத்த தர்ம நீதிமன்றங்களை அமைப்பதற்கான அதிகாரம் நிறைவேற்றுத்துறைக்கோ, நீதித்துறைக்கோ கிடையாது. பௌத்த விகாரைகளின் பரந்த சொத்துக்களைத் தன்வசப்படுத்துவதே ஜே.வி.பி-யின் மறைமுகத் திட்டம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
