ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில்
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் 14 வயதுடைய சொந்தச் சகோதரன் , நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சிறுவனை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த கொலைச் சம்பவத்திற்கான காரணம் வௌியாகியுள்ளது.
உயிரிழந்த 11 வயதுச் சிறுமிக்கும், அவரின் 14 வயதுச் சகோதரனுக்கும் இடையே கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவது தொடர்பாக வீட்டில் வைத்து கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையைக் கொலை செய்து, வீட்டின் குளியலறையிலிருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து சிறுமியின் உடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
உயிரிழந்த சிறுமியின் தாயார் குடும்பப் பொருளாதாரக் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இதனால் அச்சிறுமி தனது தந்தை மற்றும் அண்ணனுடன் மாத்திரமே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தாய் வெளிநாட்டில் இருக்கும் வேளையில், மொபைல் போன் போதை மற்றும் சிறுபிள்ளைத்தனமான ஆத்திரத்தால் அண்ணனே தங்கையைக் கொலை செய்துள்ள இச்சம்பவம் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
