தமிழகம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வருகிறார். தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வருகிறார்.
இதுகுறித்து தவெக டெல்டா மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக திருச்சி வருகை தருகிறார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர், அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தனியார் கல்லூரி வளாகத்துக்கு வருகிறார். பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை 4 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்துப் பேசுகிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். முதல்வர் விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வாகனத்தில் வரும்போது, அவரது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பேரவைத் துணைத்தலைவர் எம்.ரவிசங்கர் உடன் இருந்தார். திருச்சி வரும் முதல்வர் விஜய்க்கு, திருச்சி விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் இடம்வரை சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு அளிக்க தவெகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
